பாரீஸ் ஒலிம்பிக் 2024 | தொடங்கியது ஒலிம்பிக் கவுண்டவுன்!
பாரீஸில் அடுத்த மாதம் தொடங்கவுள்ள ஒலிம்பிக் போட்டிக்கான கவுண்டவுன் தொடங்கியது.
33-வது ஒலிம்பிக் விளையாட்டு போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் ஜூலை 26-ந்தேதி முதல் ஆகஸ்டு 11-ந்தேதி வரை நடைபெறுகிறது. இதில் 200 நாடுகளைச் சேர்ந்த 10,500-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். இதில் இந்தியாவின் சார்பில் 102 வீரர், வீராங்கனைகள் கலந்துக் கொள்கின்றனர்.
இந்த நிலையில் போட்டி நடைபெறும் பாரீஸில் ஒலிம்பிக் தீபம் ஏற்றப்பட்டது. இதனை ஃபிஃபாவின் உலகளாவிய கால்பந்து மேம்பாட்டுத் தலைவர் அர்சென் வெங்கர் ஏற்றி வைத்தார். இதன்மூலம் 30 நாட்கள் கவுண்டவுன் தொடங்கியது. ஒலிம்பிக் போட்டி எந்த நாட்டில் நடைபெற்றாலும், கிரேக்கத்தின் தென் பகுதி நகரான ஒலிம்பியாவில் பாரம்பரிய முறையில் நடனம், நாடகம் போன்ற கலைவிழாக்கள் நடத்தப்பட்டு இச்சுடர் ஏற்றப்படும்.
அப்போது நீளமான உடையணிந்த வீராங்கனை ஒருவர், பிரார்த்தனை செய்த பிறகு, நிலத்தில் மண்டியிட்டு சூரிய ஒளியால் ஒலிம்பிக் ஜோதியை ஏற்றுவார். இந்த ஒலிம்பிக் ஜோதி உலக நாடுகளை சுற்றி வந்து இறுதியில் போட்டி நடைபெறும் இடத்தை வந்தடையும் என்பது குறிப்பிடத்தக்கது.