For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

பெற்றோரே, ஆசிரியர்களே உஷார்! LSD போதை பொருள் என்றால் என்ன? எச்சரிக்கும் அரவிந்தன் IPS!

10:16 PM Mar 07, 2024 IST | Web Editor
பெற்றோரே  ஆசிரியர்களே உஷார்  lsd போதை பொருள் என்றால் என்ன  எச்சரிக்கும் அரவிந்தன் ips
Advertisement

LSD போதை பொருள் என்றால் என்ன? என்பது குறித்து விளக்கி பெற்றோரும், ஆசிரியரும் எச்சரிக்கையுடன் மாணவர்களை கண்காணிக்க வேண்டும் அரவிந்தன் ஐபிஎஸ் வலியுறுத்தியுள்ளார். 

Advertisement

இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த அரவிந்தன் ஐபிஎஸ் கூறியதாவது:

மத்திய போதைப்பொருள் தடுப்பு முனையத்தின் சென்னை அலுவலகத்தின் முன்னெடுப்பில் நாடு முழுவதும் செயல்பட்ட LSD போதை பொருள் கடத்த கும்பலை பிடித்துள்ளோம்.

போதை பொருள் விநியோகத்தில் முக்கிய நபர் சேலத்தில் இருந்து செயல்பட்டு வந்துள்ளார்.  பேங்களூர், மும்பை, ஜெய்ப்பூர், கொச்சி, சூரத் ஆகிய பகுதிகளில் போதைப் பொருள் கடத்தில் ஈடுபட்ட கூட்டாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். மொத்தமாக நாடு முழுவதிலுமிருந்து 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 18 வங்கி கணக்குகள் முடக்கப்பட்டு, விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இணையதளம் ஒன்றை உருவாக்கி அதன் வாயிலாக நாடு முடுவதும் போதைப்பொருள் கேட்பவர்களுக்கு கொரியர் வாயிலாக விநியோகித்துள்ளனர். இது குறித்த தகவல் கிடைத்தவுடன் இதன் தலைமை விநியோகஸ்தர் யார், அந்தந்த பகுதி விநியோகஸ்தர்கள் யார்யார் என்பது குறித்தெல்லாம் விசாரித்து இந்த வழக்கின் முக்கிய குற்றவாளிகளை கண்டுபிடித்துள்ளோம்.

இந்த தேடுதல் வேட்டை கிட்டதட்ட ஒரு மாதத்திற்கு மேலாக நடைபெற்று வந்தது. நேற்றுதான் இந்த தேடுதல் வேட்டை முழுமையாக முடிவடைந்தது. இந்த LSD போதைப்பொருள் ஜெர்மனியில் இருந்து வருகிறது.

LSD போதைப்பொருள் குறித்து விளக்கவே இந்த செய்தியாளர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. குறிப்பாக கஞ்சாவை பொறுத்தவரை குறைந்தபட்சம் 20 கிலோ பண்டல்களாக இடைத்தரகர்களிடையே கைமாறும். ஆனால் LSD போதைப்பொருளை பொறுத்தவரை, ஒரு கிராம் அளவுக்கு கூட கைமாறும். போதை ஏற மைக்ரோ கிராம் அளவுக்கு LSD போதைப்பொருள் இருந்தால் போதுமானது. இது நிறமற்ற, மணமற்ற, சுவையற்ற தன்மை கொண்டது. அதனால் இந்த போதைப்பொருளை கண்டு பிடிப்பது சவாலான விசயம். ஒரு ஸ்டாம்ப் அளவுக்கு மட்டுமே இந்த LSD போதைப்பொருள் இருக்கும். இந்த போதை பொருள் 18 வயது முதல் 25 வயதுக்குட்பட்ட கல்லூரி மாணவர்களிடையே அதிக அளவு புழக்கத்தில் இருந்து வருகிறது. 12 மணி நேரம் வரை போதை நீடிக்கக்கூடிய பொருள் இது.

இது குறித்து பெற்றோரும், ஆசிரியரும் தெரிந்து வைத்திருக்க வேண்டும். ஒருவரின் சிந்திக்கும் திறனை மொத்தமாக பாதிக்கும் தன்மை உடையது. இந்த LSD போதைப்பொருளை அளவுக்கு அதிகமாக எடுத்துக்கொண்டால் மூளையில் எதிர்பாராத அளவு பாதிப்பை ஏற்படுத்தும்.

இந்த போதைப்பொருளை எடுத்துக்கொண்டால் இதயதுடிப்பு அதிகரிக்கும், ரத்த அழுத்தம் அதிகரிக்கும். முடிவுகள் எடுக்க முடியாமல் தடுமாறுவது உள்ளிட்ட முதற்கட்ட பாதிப்புகள் ஏற்படும். அதோடு இந்த LSD போதைப்பொருளை தொடர்ந்து அதிக அளவு எடுத்து வரும் நிலையில் மனநிலை பாதிப்பு கூட ஏற்படும் அபாயம் உள்ளது. மேலும் எது சரி எது தவறு என முடிவெடுக்கும் தன்மையே இல்லாமல் போகும் அளவுக்கு மோசமான போதைப்பொருள் இது. இந்த பாதிப்புகள் அனைத்தும் மருத்துவ ரீதியாக உறுதிசெய்யப்பட்டுள்ளது. 20 கிலோ கஞ்சாவுக்கு நிகராக 0.1 கிராம் LSD போதைப்பொருள் கருதப்படுகிறது.

இதில் முக்கியமாக கவனிக்க வேண்டிய விசயம் பெற்றோரும், ஆசிரியர்களும் இந்த LSD போதைப்பொருள் குறித்து முழு விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். அதிலும் குழந்தைகள் ஆன்லைனில் அதிகம் நேரத்தை செலவிடுகிறார்கள் என்றாலோ, அடிக்கடி ஆன்லைனில் ஆர்டர் செய்கிறார்கள் என்றாலோ, கொரியர் தொடர்ச்சியாக பெறுகிறார்கள் என்றாலோ கவனிக்க வேண்டும்.

இந்த போதைப்பொருளை நறுமனம் வாயிலாக கண்டறியமுடியாது. பயன்படுத்துவோரின் நடத்தையை வைத்தே கண்டறிய முடியும்.

இதில் முக்கிய குற்றவாளிகளாக கைது செய்யப்பட்டவர்களில் தொழில் செய்பவர்கள், சினிமாவில் பணிபுரியும் துணை இயக்குநர்கள், நல்ல பொறியியல் கல்லூரியில் படித்து சர்வதேச நிறுவனங்களில் பணிபுரிபவர்களும் அடங்கியுள்ளனர்.

குறைந்தபட்சம் பத்தாயிரம் மதிப்பு கொண்ட செல்போனை கொண்டு டார்க்நெட்டை கையாள முடியும். இதன் உதவியோடு, அவர்களுக்கு தேவையான பொருள்களை ஆர்டர் செய்து வாங்க முடியும். அமேசான், பிளிப்காட்டில் ஒரு பொருளை ஆர்டர் செய்வது போல் சுலபமாக இந்த போதை பொருளை இளம் வயதினர் ஆர்டர் செய்கின்றனர். சாதாரண பொருள்களை ஆன்லைனில் ஆர்டர் செய்வது போல் கஞ்சா, கொகைன், LSD உள்ளிட்ட போதைப்பொருளை ஆர்டர் செய்கின்றனர். இவ்வாறு ஆர்டர் செய்பவர்களுக்கு வெளிநாட்டில் இருந்தோ, உள்நாட்டில் இருந்தோ போதைப்பொருள் விநியோகிக்கப்படுகிறது.

இந்த குறிப்பிட்ட வழக்கில் இந்த போதைப்பொருள் ஜெர்மனியில் இருந்து விநியோகிக்கப்பட்டிருக்கிறது. அந்நாட்டு அதிகாரிகளை தொடர்புகொண்டு அடுத்தகட்டமாக இந்த வழக்கை எவ்வாறு நகர்த்துவது என முடிவு செய்வோம். இந்த போதைப்பொருள் அனைத்தும் வெளிநாட்டில் இருந்து கொரியர் வாயிலாகத்தான் வருகிறது.

ஒரு திருமண அழைப்பிதழ் உள்ளே வைத்தோ, புத்தகத்தின் உள்ளே வைத்தோ இந்த LSD போதைப்பொருளை கொரியர் செய்துவிடுவார்கள். அதனை சின்ன சின்ன பகுதியாக பிரித்து தேவையான பகுதிகளுக்கு விநியோகித்து விடுவார்கள்.

விடுதிகளுடன் கூடிய கல்லூரி மாணவர்கள் எப்படியெல்லாம் இந்த வகை போதைப்பொருளை பெறுகிறார்கள் என்பது குறித்து அந்தந்த பகுதியில் உள்ள காவல் துறையினருக்கு பயிற்சி வழங்கியுள்ளோம். தற்போது பிடிக்கப்பட்டுள்ள போதைப்பொருளின் மதிப்பு ஒரு கோடி ரூபாய் இருக்கும்.

ஒரே நேரத்தில் பேங்களூர், மும்பை, ஜெய்ப்பூர், சூரத் உள்ளிட்ட பகுதிகளில் போதைபொருள் கடத்தல் கும்பலை சேர்ந்தோரை கைது செய்த நிலையில் முக்கிய குற்றவாளி சேலத்தில் இருப்பது அம்பலமானது. இவ்வாறு அரவிந்தன் ஐபிஎஸ் கூறினார்.

Tags :
Advertisement