ரயிலில் வந்திறங்கிய பார்சல்... மட்டனுக்கு பதில் நாய் இறைச்சி விற்பனை? பெங்களூரில் அதிர்ச்சி!
பெங்களூரில் ஆட்டிறைச்சிக்கு பதிலாக நாய் இறைச்சி விற்கப்படுவதாக புகார் எழுந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம், பெங்களூரு கேஎஸ்ஆர் ரயில் நிலையம் அருகில் உள்ள ஒரு கடையில் ஆட்டிறைச்சிக்கு பதிலாக நாய் இறைச்சி விற்கப்படுவதாக அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. மேலும், அவை ராஜஸ்தானில் இருந்து ஜெய்ப்பூர் - மைசூர் விரைவு ரயில் மூலம் பெங்களூரு கொண்டுவருப்படுவதும் தெரிய வந்தது. அந்த கடையில் கடந்த 12 ஆண்டுகளாக நாய் இறைச்சி விற்கப்படுவதாகவும் தகவல் கிடைத்திருக்கிறது.
தொடர்ந்து, உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய துறை ஆணையர் இது குறித்து முழு விசாரணை நடத்த உத்தரவிட்டார். இந்த புகாரின் அடிப்படையில், சம்பவ இடத்திற்கு சென்ற அதிகாரிகள் அங்கு தீவிர சோதனையில் இறங்கினர். அப்போது ரயிலில் இருந்து 90 பார்சல்களில் வந்திறங்கிய இறைச்சியை அதிகாரிகள் கைப்பற்றினர்.
இதனையடுத்து, ஆட்டிறைச்சிக்கு பதிலாக நாய் இறைச்சி விற்கப்படுவதாக கூறப்படும் அந்த கடையில், இருந்து இறைச்சி மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்காக ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இதன் முடிவுகள் வெளியான பின் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.