#ParandurAirport - திட்ட ஆலோசகர்களை தேர்ந்தெடுப்பதற்கான ஒப்பந்தப்புள்ளி வெளியீடு!
பரந்தூர் விமான நிலைய திட்ட ஆலோசகர்களை தேர்ந்தெடுப்பதற்கான ஒப்பந்தப்புள்ளி அரசால் வெளியிடப்பட்டுள்ளது.
சென்னையின் 2-வது பசுமை விமான நிலையம் காஞ்சிபுரம் அருகே உள்ள பரந்தூரில் அமைய உள்ளது.இதற்காக சுமார் 5,300 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது. இதில் ஏகனாபுரம் உள்ளிட்ட கிராமங்கள் முழுவதும் கையகப்படுத்தப்பட உள்ளன.
இதனைத் தொடர்ந்து இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்தப் கிராம மக்கள் தலைமையில் பொதுமக்கள் கடந்த 2 ஆண்டுகளாக போராட்டம் நடத்தி வருகின்றனர். கடந்த சுதந்திர தினத்தில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்திலும் பங்கேற்று பரந்தூர் விமான நிலையத்துக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றினர். போராட்டத்தில் ஈடுபட்ட பலரின் மீது வழக்குப்பதிவும் செய்யப்பட்டுள்ளது. பரந்தூர் விமான நிலையத்துக்காக ஏகனாபுரத்தை சுற்றியுள்ள கிராமங்களில் நிலம் எடுப்பதற்கான அறிவிப்பை தமிழக அரசு தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை வெளியிட்டு வருகிறது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் மனுக்களை கொடுத்து வருகின்றனர். போராட்டம் நடைபெறும் ஏகனாபுரத்தில் முதல் கட்டமாக 152.95 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்துவதற்கான அறிவிப்பை வெளியிட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்திய 125 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதனிடையே பரந்தூர் விமான நிலையத்துக்காக நிலம் கையகப்படுத்துவதற்கான அறிவிப்பை மொத்தமாக வெளியிடாமல் பகுதி பகுதியாக அரசு சார்பில் வெளியிட்டு வருகின்றனர்.
இது மக்கள் மொத்தமாக ஒன்றிணைந்து போராடுவதை தடுப்பதற்கான யுக்தி என்று சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். தொடர்ந்து ஏகனாபுரம் கிராமத்தில் 8 பிரிவுகளாக பிரித்து 234 ஏக்கர் நிலம் கையக படுத்தப்படுவதாக அறிவித்தது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் பரந்தூர் விமான நிலையத் பெருந்திட்ட அறிக்கை தயாரிக்கும் பணியை தமிழ்நாடு அரசு தொடங்கி உள்ளது. இது தொடர்பாக ஆலோகர்களை தேர்ந்தெடுப்பதற்கான ஒப்பந்தப்புள்ளியையும் அரசு அறிவித்தது.