இந்திய கிரிக்கெட் வீரர் ஸ்ரேயாஸ் ஐயர் ஐசியூ-வில் அனுமதி
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதலில் ஒருநாள் தொடர் நடந்தது. அதன்படி, நடந்து முடிந்த முதல் இரு போட்டிகளில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. இந்த நிலையில், இந்தியா – ஆஸ்திரேலியா இடையிலான 3வது ஒருநாள் போட்டி சிட்னியில் கடந்த 25ம் தேதி நடைபெற்றது.
இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 46.4 ஓவர்களில் 236 ரன்களில் ஆல் அவுட் ஆனது. ஆஸ்திரேலிய அணியில் தரப்பில் அதிகபட்சமாக ரென்ஷா 56 ரன்கள் அடித்தார். இந்தியா தரப்பில் ஹர்ஷித் ராணா 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார். பின்னர் 237 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 38.3 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 237 ரன்கள் எடுத்து 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
அதிகபட்சமாக ரோகித் சர்மா 121 ரன்களுடனும், விராட் கோலி 74 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். முன்னதாக, இந்த ஆட்டத்தில் ஆஸ்திரேலிய வீரர் அலெக்ஸ் கேரி அடித்த பந்தை ஸ்ரேயாஸ் ஐயர் பின்னோக்கி ஓடி சென்று அற்புதமாக பிடித்தார். பந்தை பிடித்த பின் அவர் நிலைதடுமாறி கீழே விழுந்தார். அப்போது, அவருக்கு இடது விலா எலும்பில் காயம் ஏற்பட்டதாக தெரிகிறது.
தொடர்ந்து, அவர் சிகிச்சைக்காக பெவிலியன் அழைத்து செல்லப்பட்டார். இந்நிலையில் ஸ்ரேயாஸ் ஐயர் சிட்னியில் உள்ள மருத்துவமனையின் ஐசியூ-வில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஸ்ரேயாஸ் ஐயரின் உடலுக்குள் ரத்தக்கசிவு இருப்பதால் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.