பரந்தூர் விமான நிலைய போராட்டம்: தமிழ்நாட்டை விட்டு வெளியேற கிராம மக்கள் முடிவு!
பரந்தூர் விமான நிலையத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து சுமார் இரண்டு ஆண்டுகளாக போராடி வரும் ஏகனாபுரம் கிராம மக்கள் தமிழ்நாட்டை விட்டு வெளியேற முடிவு செய்துள்ளனர்.
சென்னையின் 2வது பசுமை விமான நிலையம் காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் அமையவுள்ளது. இதற்காக பரந்தூரை சுற்றியுள்ள 13 கிராமங்களில் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது. இந்த திட்டத்துக்காக ஏகனாபுரம் என்ற கிராமத்தில் உள்ள குடியிருப்புகள், நிலங்கள் என மொத்தமாக கையகப்படுத்தப்பட உள்ளன. இதனால் இந்தத் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த கிராம மக்கள் சுமார் இரண்டு ஆண்டுகளாக போராடி வருகின்றனர்.
இதனால் தங்களின் இருப்பிடமும், வாழ்வாதாரமான விளைநிலங்களும் பறிபோய் விடும் எனக் கூறி விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, நாள்தோறும் இரவு நேரங்களில் ஊர் மைதானத்தில் கிராம மக்கள் ஒன்று கூடி தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதையும் படியுங்கள் : “விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக வெற்றி பெறும் என எடப்பாடி பழனிசாமி அறிவித்துவிட்டார்” – திருமாவளவன் பேச்சு!
இந்நிலையில், 690 நாட்களாக போராடி வரும் ஏகனாபுரம் கிராம மக்கள் தீர்வு கிடைக்காததால், வாழ்வதற்கு தஞ்சம் கேட்டு ஆந்திர மாநிலத்தை அணுக முடிவு செய்துள்ளனர். இதற்காக சித்தூர் மாவட்ட ஆட்சியரை சந்திக்கவும் நேரம் கேட்டுள்ளனர். ஆந்திர அரசிடம் தஞ்சம் கேட்டு சித்தூர் மாவட்ட ஆட்சியரை சந்திக்க ஒரு குழுவினர் ஏற்பாடு செய்துள்ளனர். மேலும், விமான நிலைய திட்டத்தை கைவிட மறுத்து நிலம் எடுப்பு பணிகளை மேற்கொள்வதால், கிராம மக்கள் தமிழ்நாடு அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.