“பறந்து போனாரா? மறந்து போனாரா?, பொதுநலமா? சுயநலமா?” - விஜய்க்கு தமிழிசை சௌந்தரராஜன் சரமாரி கேள்வி
பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிராக 900 நாட்களுக்கு மேல் போராடி வந்த ஏகனாபுரம் கிராம மக்களை நேற்று(ஜன.20) தவெக தலைவர் விஜய் நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார். அந்த சந்திப்பின்போது மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு எதிராக பல கேள்விகளை எழுப்பிய விஜய், விமான நிலையம் அமைக்க வேண்டுமென்றால் விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் இடத்தை தேர்வு செய்யுங்கள் என்று பேசியிருந்தார். அவர் பேச்சுக்கு அரசியல் தலைவர்கள் பலர் தொடர்ந்து கருத்து தெரிவித்து வருகின்றனர்
இந்த நிலையில், பரந்தூர் மக்களை விஜய் சந்தித்தது பொதுநலமா? சுயநலமா? என பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் சரமாரி கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர்,
“910 நாட்கள் மக்கள் போராடுகிறார்கள். 910வது நாளில் அவர் போகிறார். பறந்து போனாரா? மறந்து போனாரா? இதுவரை மறந்து போன விஜய் , திடீரென பரந்தூருக்கு பறந்து போனார் என்றால் என்ன அர்த்தம்? சினிமாவில் நடிக்கும்போது பரந்தூரில் மக்கள் ஓலம் போட்டால் அவருக்கு காதிலேயே விழாது. டேக் மட்டும் தான். இப்போது சினிமா முடிந்து டேக் ஆஃப்க்காக அங்கே போய் இருக்கிறார்.
பரந்தூர் விமான நிலையத்திற்கு மாநில அரசு தேர்வு செய்து கொடுத்த இடத்தை மத்திய அரசு ஏன் ஏற்றுக்கொண்டது என்றால், மீனம்பாக்கத்தில் இருந்தும் பெங்களூர் நெடுஞ்சாலையிலிருந்தும் கனெக்டிவிட்டி இருக்க வேண்டும் என்பதற்காகத்தான். 5500 ஏக்கரில் 1000க்கும் மேல் புஞ்சை நிலங்கள் இருக்கிறது. நாங்களும் விவசாயிகளுக்கு ஆதரவாளர்கள்தான்.
இதே விஜய், விவசாயிகளுக்கு கொடுக்கும் நிவாரண தொகையை உயர்த்தி கொடுக்கலாம். அவர்கள் மீதான வழக்கு ரத்து செய்யலாம். அவர்களின் நியாயத்திற்காக போராடுகிறார்கள் என்று சொன்னால் கேட்டிருப்பேன். நீங்கள் இத்தனை ஆண்டுகள் கழித்து இடத்தை மாற்று என்று சொன்னால் அதை ஏன் முதல் நாளே சொல்லவில்லை? இன்னொரு இடம் இருந்தால் சொல்லுங்கள். இவ்வளவு செய்து நிலம் கையகப்படுத்தப்பட்ட பிறகு அவர் பறந்து பரந்தூருக்கு வருவேன் என்றால், அது பொது நலமா? சுயநலமா?” என்றார்.