முடங்கிய மைக்ரோசாப்ட்: கையால் எழுதப்பட்ட Boarding Pass-களை வழங்கிய இண்டிகோ நிறுவனம்!
மைக்ரோசாஃப்ட் மென்பொருள் முடங்கிய நிலையில், இண்டிகோ நிறுவனம் கையால் எழுதப்பட்ட Boarding Pass-களை தங்கள் வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகிறது.
மைக்ரோசாப்டின் கிளவுட் சேவைகளில் ஏற்பட்ட பெரும் இடையூறு, இந்தியா உட்பட உலகம் முழுவதும் விமானங்கள் ரத்து மற்றும் தாமதங்களை ஏற்படுத்தியது. இந்த செயலிழப்பு பல விமான சேவைகளை பாதித்தது. அதோடு, விமானங்களை தரையிறங்குவது விமான நிலையங்களில் விமான நடவடிக்கைகளை பாதித்தது.
குறிப்பாக டெல்லி மற்றும் மும்பை விமான நிலையங்களில் இண்டிகோ, ஸ்பைஸ் ஜெட், ஆகாசா போன்ற விமானங்களின் செக்-இன் சேவைகள் பாதிக்கப்பட்டன. இதனைத்தொடர்ந்து இந்த சேவைகள் மேனுவலாக நடத்தப்பட்டதாக விமான நிறுவனங்கள் தெரிவித்தன. இதேபோல ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் வங்கி சேவைகளும் பாதிக்கப்பட்டதாக செய்தி வெளியாகியுள்ளது.
மைக்ரோசாஃப்ட் மென்பொருள் முடங்கியுள்ளதால், கணினிகளை இயக்கமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பெரு நிறுவனங்கள் இதற்கான மாற்று வழியை ஏற்பாடு செய்து வருகின்றன. அந்த வகையில், இண்டிகோ நிறுவனம் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு கையால் எழுதப்பட்ட Boarding Pass-களை வழங்கி வருகிறது. இதனை அந்நிறுவன வாடிக்கையாளர்கள் புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் “கற்கால வாழ்கைக்கு திரும்புகிறோம்” என பதிவிட்டு வருகின்றனர்.