Paralympics2024 | இந்திய வீராங்கனை பூஜா ஜத்யன் காலிறுதிக்கு தகுதி!
பாரீஸ் பாராலிம்பிக்ஸில் மகளிருக்கான வில்வித்தைப் போட்டியில் இந்திய வீராங்கனை பூஜா ஜத்யன் துருக்கி வீராங்கனையை வீழ்த்தி காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ளார்.
பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் 17-வது பாராலிம்பிக் தொடர் கடந்த 28-ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இந்த போட்டிகள் செப்.8-ம் தேதி வரை என மொத்தம் 11 நாட்கள் நடைபெறுகின்றன. இதில் 4,400 வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். இந்தியா சார்பில் 32 பெண்கள் உட்பட 84 பேர் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.
இந்நிலையில், இன்று (செப். 3) நடைபெற்ற மகளிர் வில்வித்தைப் போட்டியில் உலக பாரா சாம்பியன்ஷிப்பில் வெள்ளிப் பதக்கம் வென்ற பூஜா ஜத்யன், துருக்கியின் யக்மூர் செங்குலை 6-0 என்ற கணக்கில் வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார். 27 வயதான பூஜா, தரவரிசைச் சுற்றில் முதல் 9 இடங்களுக்குள் நுழைந்து காலிறுதிக்குள் நுழைந்தார். மேலும், டோக்கியோ பாராலிம்பிக்ஸ் வெண்கலப் பதக்கம் வென்ற சீனாவின் வு சுன்யனை நாளை மறுநாள் (செப். 5) காலிறுதியில் எதிர்கொள்ள உள்ளார். சுன்யன் காலிறுதிக்கு முந்தைய ஆட்டத்தில் மங்கோலியாவின் ஓயுன்-எர்டெனே புயன்ஜார்கலை தோற்கடித்தார்.
1997-ம் ஆண்டில், பூஜா இரண்டு மாத குழந்தையாக இருந்தபோது, அதிக காய்ச்சலும் மருத்துவர்களின் அலட்சியத்தால் தவறான ஊசி செலுத்தியதன் விளைவாக அவரது இடது காலில் போலியோ ஏற்பட்டது. இருப்பினும், சிறுவயதில் வில்வித்தையை தேர்வு செய்த பூஜா ஆசிய பாரா சாம்பியன்ஷிப் 2023 இல் வெள்ளிப் பதக்கம் வென்று அசத்தினார். 2024-ம் ஆண்டில், பாரா வில்வித்தை உலக தரவரிசைப் போட்டியில் வெள்ளிப் பதக்கத்தைப் பெற்ற அவர், பாரா வில்வித்தை ஐரோப்பியக் கோப்பை 2வது சுற்றில் மகளிர் அணி மற்றும் கலப்பு அணி ஆகிய இரண்டிலும் தங்கப் பதக்கங்களைக் கைப்பற்றினார்.