#Paralympics - ராணுவ வீரர் to விளையாட்டு வீரர்! யார் இந்த ஹோகாடோ ஹோடோஷே?
பாராலிம்பிக் தொடரில் ஷாட் புட் போட்டியில் இந்தியாவைச் சேர்ந்த ஹோகாடோ ஹோடோஷே வெண்கலப் பதக்கம் வென்று அசத்தியுள்ளார்.
பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நடைபெற்று வரும் பாரா ஒலிம்பிக் போட்டிகளில் தொடர்ந்து இந்திய வீரர்கள் ஜொலித்து வருகின்றனர். இந்நிலையில் ஆண்களுக்கான குண்டு எறிதல் போட்டியில் இந்தியாவைச் சேர்ந்த ஹோகாடோ ஹோடோஷே வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார். தனது ஆறு முயற்சிகளில் அதிகபட்ச தூரமாக 14.65 மீட்டர் தூரம் வீசி மூன்றாவது இடத்தை பிடித்து வெண்கலப் பதக்கத்தை வென்றார்.
இதன்மூலம் 6 தங்கம், 9 வெள்ளி, 12 வெண்கலம் என இதுவரை இந்தியா 27 பதக்கங்கள் பெற்றுள்ளது. கடந்த ஆண்டு 19 பதக்கங்களை மட்டும் வென்றிருந்த இந்தியா, இந்த ஆண்டு தற்போதுவரை 27 பதக்கங்களை வென்றுள்ளது. நேற்றைய போட்டியில் இந்தியாவின் பிரவீன் குமார் ஆடவர் உயரம் தாண்டுதலில் தங்கப் பதக்கத்தை வென்றிருந்தார். இன்னும் இரண்டு நாட்கள் மீதமுள்ள நிலையில் இந்தியா மேலும் பதக்கங்களை வெல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.
யார் இந்த ஹோகாடோ ஹோடோஷே ?
நாகாலாந்தை சேர்ந்த ஹோகாடோ ஹோடோஷே விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவர். குடும்பத்தின் இரண்டாவது வாரிசான இவர் தனது சிறுவயது முதல் ராணுவத்தில் சேர வேண்டும் என ஆர்வத்தில் இருந்தார்.அதற்காக தன்னை தயார் செய்து கொண்டு இந்திய ராணுவத்திலும் இணைந்து பணியாற்றினார். கடந்த 2002 ஆம் ஆண்டு அக்டோபர் 14ஆம் தேதி அன்று நடந்த ராணுவ நடவடிக்கையின் போது, கண்ணி வெடியில் காலை வைத்து விபத்தில் சிக்கினார். அந்த விபத்தில் இவரின் இடதுகாலில் முட்டிகாலுக்கு கீழ் பகுதி முழுமையாக நீக்கப்பட்டது. ஆனால் அவரது நம்பிக்கையை இழக்காமல் தொடர்ந்து குண்டு வீசுதலில் பயிற்சி பெற்று வந்தார். தற்போது இந்திய ராணுவத்தின் அசாம் ரெஜிமென்ட்டில் ஹவில்தாராக பணியாற்றுகிறார்.