பாப்பாக்குடி துப்பாக்கிச்சூடு: சிறுவன் மீது பல வழக்குகள், போலீசார் தற்காப்பிற்காக சுட்டதாக புதிய தகவல்!
திருநெல்வேலி மாவட்டம் பாப்பாக்குடியில் உதவி ஆய்வாளர் மீது அரிவாளால் தாக்குதல் நடத்த முயன்றபோது துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்கான 17 வயது சிறுவன் சண்முகசுந்தரம் மீது ஏற்கனவே பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதாகப் புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. இச்சம்பவம் குறித்து மேலும் பல அதிர்ச்சியூட்டும் விவரங்கள் தற்போது வெளிவந்துள்ளன.
நேற்று இரவு பாப்பாக்குடி ஊருக்கு வெளியே ரமேஷ் என்பவருடன் சண்முகசுந்தரம் மது அருந்திக் கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது. அப்போது, அங்கு வந்த சக்தி என்ற மாற்று சமூகத்தைச் சேர்ந்த நபரை இருவரும் சேர்ந்து அரிவாளால் வெட்ட முயற்சித்துள்ளனர்.
இதில், சக்திக்கு கால் பகுதியில் வெட்டுக் காயம் ஏற்பட்டுள்ளது. ஊர் மக்கள் அளித்த தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.போலீசார் வந்ததும், சண்முகசுந்தரம் காவல்துறையினரையும் அரிவாள் கொண்டு தாக்க முயற்சித்துள்ளார்.
போலீசார் அவரைத் தடுக்க முயன்றபோதும், சண்முகசுந்தரம் அரிவாளுடன் போலீசாரை விரட்டிச் சென்றுள்ளார். இதனால் தப்பிக்கும் நோக்கில், போலீசார் அப்பகுதியில் உள்ள ஒரு வீட்டில் புகுந்துள்ளனர்.
வீட்டிற்குள் நுழைந்த பின்னரும், சண்முகசுந்தரம் அரிவாளுடன் துரத்தி வந்து, உதவி ஆய்வாளரை வெட்ட முயற்சித்துள்ளார். போலீசார் கதவை அடைத்தபோதும், கதவையும் அரிவாளால் ஆக்ரோஷமாகத் தாக்கியுள்ளார்.
இந்த சூழ்நிலையில், தற்காப்புக்காக போலீசார் சிறுவன் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். இதில் சிறுவனின் வயிற்றுப் பகுதியில் காயம் ஏற்பட்டது. உடனடியாக அவர் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார்.
இச்சம்பவத்தில், ஒரு காவல்துறை அதிகாரியும் அரிவாள் வெட்டுக் காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும், சண்முகசுந்தரத்தால் தாக்கப்பட்ட சக்தி என்பவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த துப்பாக்கிச்சூடு மற்றும் தாக்குதல் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காவல்துறையினர் இதுகுறித்து மேலும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.