தூத்துக்குடியில் விமரிசையாக நடைபெற்ற பனிமய மாதா ஆலய திருப்பலி!
தூத்துக்குடியில் உள்ள உலக புகழ் பெற்ற தூய பனிமய மாதா ஆலயத்தில் பெருவிழா சிறப்பு திருப்பலி இன்று நடைபெற்றது.
தூத்துக்குடியில் உலகப் புகழ் பெற்ற தூய பனிமய மாதா ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் 442ம் ஆண்டு திருவிழா கடந்த 26ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இத்திருவிழாவின் முக்கிய நிகழ்வான கூட்டுத்திருப்பலி இன்று நடைபெற்றது. இதில் உலக மக்களின் நன்மை வேண்டி சிறப்பு பிரார்த்தனை செய்யப்பட்டது. இவ்விழாவில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்துக் கொண்டனர்.
பெருவிழா நிறைவுத் திருப்பலி இன்று மாலை 5 மணியளவில் நடைபெறுகிறது. தொடர்ந்து, இத்திருவிழாவின் சிகர நிகழ்வான திருவுருவ பவனி இன்று மாலை நடைபெறுகிறது. அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் அன்னை எழுந்தருளி மாநகர வீதிகள் வழியாக பவனி வருவார். இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இவ்விழாவை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்திற்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் உள்ளூர் விடுமுறை அளித்துள்ளது. இவ்விழாவிற்காக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல்.பாலாஜி சரவணன் தலைமையில் 900 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.