பனிமய மாதா பேராலய தேர்த்திருவிழா -சிறப்பு திருப்பலியில் ஏராளமானோர் பங்கேற்பு!
பனிமய மாதா பேராலய தேர்த்திருவிழாவின் மூன்றாம் நாளான இன்று தமிழ் மற்றும் மலையாளத்தில் திருப்பலிகளும், நற்கருணை பவனியும் நடைபெற்றது.
தூத்துக்குடி கடற்கரை சாலையில் உலக புகழ்பெற்ற பனிமய மாதா பேராலயம்
அமைந்துள்ளது. கத்தோலிக்க தலைமை பீடமான வாடிகன் சிட்டியால், பசிலிகா அந்தஸ்து
பெற்ற பேராலயமாகும். இந்த பேராலயத்தில் ஆண்டுதோறும் தேர்த்திருவிழா ஜூலை 26ம்
தேதி கொடியேற்றத்துடன் துவங்கி ஆக்ஸ்ட் 5 ம் தேதி வரை 10 நாட்கள் வெகு சிறப்பாக
நடைபெறும்.
கொடியேற்றத்திலிருந்து திருவிழாவின் பத்து நாட்கள் காலையும், மாலையும் சிறப்பு திருப்பலிகள் நடைபெறும். ஆகஸ்ட் 5-ம் தேதி திருவிழாவின் முக்கிய நிகழ்வான அன்னையின் தேர் பவனி வெகு சிறப்பாக நடைபெறும். அந்த வகையில் இந்த ஆண்டு 442ம் ஆண்டுக்கான திருவிழா கொடியேற்றத்துடன் ஜூலை 26ம் தேதி காலை துவங்கியது.
தொடர்ந்து இரண்டு நாட்களாக சிறப்பு திருப்பலிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று காலை நடைபெற்ற சிறப்பு திருப்பலியில் அமலோற்பவ மாதா வாலிபர் சபை, புனித வின்செண்ட் தேபவுல் சபை, ஸ்டேட்பேங்க் காலனி சபை இறை பொதுமக்கள் கலந்து கொண்டனர். இன்று மலையாள மொழியில் நடைபெற்ற சிறப்பு திருப்பலிகள் ஆயர் ஸ்டிபன் தலைமையில் நடைபெற்றது. தொடர்ந்து மாலையில் செபமாலை, நற்கருணை பவனியும் நடைபெறும்.
இந்த திருவிழாவில் உள்ளூர் மட்டுமின்றி வெளி மாவட்டம் மற்றும் இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, உள்ளிட்ட வெளிநாடுகளிலிருந்தும் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொள்வார்கள். மேலும் ஆகஸ்ட் 5ஆம் தேதி திருவிழாவிற்காக உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது. வெளி மாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வரும் பக்தர்கள் வசதிக்காக சிறப்பு ரயில் மற்றும் பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. திருவிழாவின் பாதுகாப்புக்காக தூத்துக்குடி நகர் பகுதிகளில் சுமார் 1000 போலீசார் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் தலைமையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.