பங்குனி பிரதோஷம் - சதுரகிரியில் குவியும் பக்தர்கள்!
விருதுநகர் மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ளது பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில். இந்த கோயில் கடல் மட்டத்திலிருந்து சுமார் 4500 அடி உயரத்தில் அமைந்துள்ளது. இந்த கோயிலுக்கு கடந்த காலங்களில் தினந்தோறும் பக்தர்கள் அனுமதிக்கப்பட்ட நிலையில், 2015 ஆம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் 10 பக்தர்கள் வரை உயிரிழந்தனர்.
இதனை அடுத்து மாதந்தோறும் பிரதோஷம், அமாவாசை, பௌர்ணமி உள்ளிட்ட 8 நாட்கள் மட்டுமே பக்தர்கள் கோயிலுக்கு செல்ல அனுமதி என்பது வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பங்குனி மாத பிரதோஷம் மற்றும் அமாவாசையை முன்னிட்டு இன்று 27ஆம் தேதி முதல் வரும் 30ஆம் தேதி வரை மொத்தம் நான்கு நாட்கள் சதுரகிரி கோயிலுக்கு பக்தர்கள் செல்ல கோயில் நிர்வாகம் அனுமதி வழங்கி உள்ளது.
இந்த நிலையில் இன்று பங்குனி மாத பிரதோஷத்தை முன்னிட்டு விருதுநகர், மதுரை, திருச்சி,நெல்லை சென்னை,தேனி, கோவை உள்ளிட்ட பல்வேறு பகுதியில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து கோயில் அடிவாரப் பகுதியில் குவிந்தனர். கோயிலுக்கு செல்ல அனுமதிக்கப்பட்ட நிலையில் நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் மலையேறி சென்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர். குறிப்பாக இரவில் தங்குவதற்கு அனுமதி கிடையாது எனவும் ,காலை 6 மணி முதல் 12 மணி வரை மட்டுமே அனுமதி எனவும் கோயில் நிர்வாகம் மற்றும் வனத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.