For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

"பம்பரம் சின்னம் விவகாரம் : வைகோ தாக்கல் செய்த அவசர முறையீடு மனு நாளை விசாரணை" - சென்னை உயர்நீதிமன்றம்!

11:57 AM Mar 25, 2024 IST | Web Editor
 பம்பரம் சின்னம் விவகாரம்   வைகோ தாக்கல் செய்த அவசர முறையீடு மனு நாளை விசாரணை    சென்னை உயர்நீதிமன்றம்
Advertisement

”பம்பரம் சின்னம் ஒதுக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடக் கோரி மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தாக்கல் செய்த அவசர முறையீடு மனு நாளை விசாரிக்கப்படும் என  சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Advertisement

மக்களவைத் தேர்தலில் மதிமுகவுக்கு பம்பரம்  சின்னத்தை ஒதுக்க  தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வழக்கு தொடர்ந்திருந்தார்.  கடந்த 2006 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் 5.98 சதவீத வாக்குகள் பெற்றுள்ளதாகக் கூறி,  மதிமுக கட்சியின் அங்கீகாரத்தைத் தேர்தல் ஆணையம் ரத்து செய்தது.

அதன்பின் கடந்த 2014 ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் பம்பரம் சின்னம் ஒதுக்கப்பட்டது.  வரவிருக்கும் மக்களவைத் தேர்தலிலும் பம்பரம் சின்னம் ஒதுக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் தேர்தல் ஆணையத்துக்கு மதிமுக மனு அனுப்பியது.

பம்பரம் சின்னம் பொது சின்னம் இல்லை என்பதாலும்,  வேறு எந்த கட்சியும் அந்த சின்னத்தைக் கோரவில்லை என்பதாலும்,  மக்களவைத் தேர்தல் அறிவிப்பு எந்த நேரத்திலும் வெளியாகலாம் என்பதாலும்,  தங்கள் மனுவைப் பரிசீலித்து,  பம்பரம் சின்னம் ஒதுக்கத் தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும் என்று வைகோ தனது மனுவில் கோரிக்கை விடுத்தார்.

இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் மார்ச் 1ம் தேதி  நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், ஜி.அருள்முருகன் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.  இதனைத் தொடர்ந்து மதிமுக அளித்த மனுவிற்கு இந்திய தேர்தல் ஆணையம் பதிலளிக்க வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.  தொடர்ந்து விண்ணப்பத்தினை பரிசீலனை செய்து தகுந்த உத்தரவை பிறப்பிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டது.

இந்த நிலையில் மதிமுகவுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ சார்பில் அவசர முறையீடு செய்யப்பட்டுள்ளது.  வேட்பு மனு தாக்கல் செய்ய இன்னும் மூன்று நாட்களே உள்ளது, இன்னும் தங்களது கோரிக்கையை தேர்தல் ஆணையம் பரிசீலிக்கவில்லை என அவசர முறையீட்டு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அவசர முறையீட்டு மனுவை நாளை விசாரிப்பதாக தலைமை நீதிபதி அமர்வு தெரிவித்துள்ளது.

Tags :
Advertisement