“பாம்பன் புதிய ரயில் பாலம் இந்த மாத இறுதிக்குள் திறக்கப்படும்” - தெற்கு ரயில்வே பொது மேலாளர் தகவல்!
பாம்பன் கடலில் 550 கோடி ரூபாயில் புதிய ரயில் பாலம் பிரமாண்டமாக அமைக்கப்பட்டுள்ளது. கட்டுமானப் பணி முடிந்த நிலையில், உயர் அதிகாரிகள் முன்னிலையில் ஜன.,31ஆம் தேதியன்று ரயில் இயக்கி ஒத்திகை சரி பார்க்கப்பட்டது.
இந்நிலையில் பாம்பன் புதிய பாலத்தை பிரதமர் மோடி வரும் 28ஆம் தேதி கொடியசைத்து திறந்து வைக்க உள்ளதாக தென்னக ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் தெரிவித்துள்ளார். ராமேஸ்வரத்தில் திறப்பு விழா ஏற்பாடு மற்றும் பிரதமர் பங்கேற்கும் நிகழ்ச்சிகள் தொடர்பான முன்னேற்பாடுகள் குறித்து, தென்னக ரயில்வே பொது மேலாளர் ஆர்.என் சிங், தென்னக ரயில்வே மதுரை கோட்ட மேலாளர் ஷரத் ஶ்ரீ வஸ்தவா மற்றும் தென் மண்டல ஐஜி (ஆர்பிஎப்) ஈஸ்வர ராவ் உள்ளிட்டோர் அடங்கிய குழு இன்று ஆய்வு மேற்கொண்டது.
அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தென்னக ரயில்வே பொது மேலாளர் ஆர்.என். சிங், ராமேஸ்வரத்தில் கட்டப்பட்டு வரும் புதிய ரயில் நிலையத்தின் பணிகள் 60 சதவீதம் நிறைவடைந்துள்ளது. ஆகஸ்ட் மாதம் கட்டுமான பணிகள் நிறைவடைந்து மக்களின் பயன்பாட்டிற்கு திறந்து விடப்படும் என தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், பாம்பன் புதிய ரயில் பாலம் இந்த மாத இறுதிக்குள் திறக்கப்படும்.
திறப்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்வார். ஆனால் திறப்பு விழாவிற்கான தேதி விரைவில் தெரிவிக்கப்படும் என தெரிவித்தார். ராமேஸ்வரத்திற்கு கூடுதலாக ரயில்கள் இயக்க திட்டம் உள்ளதா என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்தவர், பாம்பன் புதிய ரயில் பாலம் திறக்கப்பட்ட பின் ராமேஸ்வரத்திற்கு புதிய ரயில் சேவை இயக்குவது குறித்து முடிவெடுக்கப்படும்.
மேலும் பாம்பன் பழைய ரயில் தூக்கு பாலம் பாதுகாப்பான முறையில் அகற்றப்பட்டு, அதனை காட்சிப்படுத்துவது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டு வருகிறது. பழைய தூக்கு பாலம் நிச்சயம் அகற்றப்படும். தூக்கு பாலம் அகற்றப்பட்டால் மட்டுமே அவ்வழியாக கப்பல்கள் கடந்து செல்ல ஏதுவாக இருக்கும் என்றார்.
தற்போது பயணிகள் ராமேஸ்வரம் ரயில் நிலையத்தை பயன்படுத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. கட்டுமான முழுமையாக நிறைவடைந்த பின் பயணிகளுக்கு அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்படும். பாம்பன் புதிய ரயில் பாலத்தில் காற்றின் வேகம் அதிகமாக இருந்தாலும் ரயில்களை இயக்க முடியும் என்பதால் காற்றின் வேகம் காரணமாக மண்டபம் ரயில் நிலையத்தில் ரயில் இடைநிறுத்தம் செய்ய தேவைப்படாது என தென்னக ரயில்வே பொது மேலாளர் ஆர்.என். சிங் தெரிவித்தார்.