நியூயார்க் நகரில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது போராட்டத்தில் ஈடுபட்ட பாலஸ்தீன ஆதரவாளர்கள்!
நியூயார்க் நகரில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது, பாலஸ்தீன ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
காசா மீது இஸ்ரேல் ராணுவத்தினர் கடுமையான தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர். வான் வழியாக சரமாரியாக குண்டுகளை வீசி வருகின்றனர். இதனால் தினமும் பலியானவர்கள் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது. இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 21 ஆயிரத்தை நெருங்கியது. காசா மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலை கண்டித்து கடந்த 3 நாட்களுக்கு முன் அமெரிக்காவில் நியூயார்க் மற்றும் லாஸ்ஏஞ்சல்ஸ் நகரங்களில் உள்ள விமான நிலையங்களை பாலஸ்தீன ஆதரவாளர்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பதற்றமான சூழ்நிலை நிலவியது.
லாஸ்ஏஞ்சல்ஸ் சர்வதேச விமான நிலையத்தை அவர்கள் முற்றுகையிட்டனர். கையில் பதாகைகள் ஏந்தி அவர்கள் கோஷங்கள் எழுப்பினார்கள். திடீரென இந்த போராட்டம் வன்முறையாக மாறியது. விமான நிலைய நுழைவு வாயிலை அவர்கள் முற்றுகையிட்டனர். இதனை தடுக்க முயன்ற போலீஸ் அதிகாரி ஒருவரை அவர்கள் தாக்கினார்கள். இதையடுத்து அங்கு கூடுதல் போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டனர்.
நியூயார்க்கின் டைம்ஸ் சதுக்கத்தில் நடைபெறும் புத்தாண்டு கொண்டாட்டம் உலகப்புகழ் பெற்றது. பால் டிராப் எனப்படும் கிறிஸ்டல்களால் ஆன பந்து டைம்ஸ் சதுக்கத்தின் உச்சியில் இருந்து விடப்படும். அந்த நிகழ்வை காண லட்சக்கணக்கானோர் திரள்வார்கள். ஏற்கனவே அமெரிக்காவில் பாலஸ்தீன ஆதரவாளர்கள் அவ்வப்போது போராட்டத்தில் ஈடுபடுவதால் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு அதிகமான காவலர்கள் டைம்ஸ் சதுக்கத்தில் குவிக்கப்பட்டிருந்தனர்.
அவர்கள் எதிர்பார்த்தது போல், நியூயார்க் நகரில் நேற்று இரவு புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது திரளான பாலஸ்தீன ஆதரவாளர்கள் பதாகைகளை உயர்த்திக் கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் அனைவரும் டைம்ஸ் சதுக்கத்தை நோக்கி நகரவதை வீடியோவில் காணமுடிகிறது. போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கண்காணிக்க அந்நாட்டு காவல்துறையினர் ட்ரோன் கேமராக்களை பயன்படுத்தினர்.
உலகப்புகழ் பெற்ற நியூயார்க் புத்தாண்டு கொண்டாட்டத்தில் இதுபோன்ற போராட்டம் நடைபெற்றதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்ட இந்த வீடியோவை அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தனது ட்விட்டர் (எக்ஸ்) பக்கத்தில் பதிவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.