மேற்கு கரையில் இஸ்ரேல் தாக்குதல் - 5பேர் கொல்லப்பட்டுள்ளதாக #PalestineHealthMinistry அறிவிப்பு!
மேற்கு கரையில் இஸ்ரேல் வான்வழி தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து 5பேர் கொல்லப்பட்டுள்ளதாக பாலஸ்தீன சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது.
பாலஸ்தீனத்தின் மீது இஸ்ரேல் கடந்த 10மாதங்களுக்கு மேலாக தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதலில் இதுவரை 40 ஆயிரத்துக்கு அதிகமான மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். அதிகளவில் பெண்கள் மற்றும் குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளனர்.
இதனிடையே மார்ச் மாத இறுதியில் காசாவில் தற்காலிக போர் நிறுத்தம் கொண்டுவரப்பட்டது. ஆனால் இந்த தற்காலிக போர் நிறுத்தமும் ஏப்ரல் தொடக்கத்திலேயே முடிவுக்கு வந்தது. இதனையடுத்து காசா மீதான தாக்குதலை இஸ்ரேல் மீண்டும் நிகழ்த்தி வருகிறது. வான்வழி, தரைவழி தாக்குதல்களை இஸ்ரேல் மேற்கொண்டு வருகிறது. இதனால் மீண்டும் ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்து வருகின்றனர். இதனிடையே காசாவில் போர்நிறுத்தம் கொண்டுவர கடந்த வாரம் கத்தாரில் அமைதி பேச்சுவார்த்தை நடைபெற்றது.
ஆனால் உடன்பாடு எட்டப்படாமல் அந்த பேச்சுவார்த்தை பாதியிலேயே முடிவுற்றது. இதனைத் தொடர்ந்து போர்நிறுத்தம் தொடர்பாக இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையே போர்நிறுத்தத்தை மேற்கொள்ளும் முயற்சியில் அமெரிக்கா தீவிரமாக முனைப்பு காட்டியது.
அப்போது, காசாவில் போர் நிறுத்தம் ஏற்பட இதுவே கடைசி வாய்ப்பு என்ற எச்சரிக்கையை இஸ்ரேலுக்கும், ஹமாஸுக்கும் அமெரிக்க தரப்பில் விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால் இந்த பேச்சுவார்த்தையும் தோல்வியைத் தழுவவே பிளிங்கன் அமெரிக்கா திரும்பினார்.
ஜெனின் மற்றும் துல்கர்மில் பயங்கரவாதத்தை முறியடிக்க பாதுகாப்புப் படைகள் தாக்குதலை தொடங்கியுள்ளோம் என இஸ்ரேல் இராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.