“பாஜக கூட்டணியில் சேர்ந்தபோதே அதிமுகவின் வெர்ஷன் முடிந்துவிட்டது” - ஆர்.எஸ். பாரதி விமர்சனம்!
தமிழ்நாடு சட்டப்பேரவையில் கடந்த இரு நாட்களாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இடையே சட்டம் - ஒழுங்கை முன்னிறுத்தி கார சார விவாதங்கள் நடைபெற்றன. திராவிட மாடல் 2.0 ஆட்சி 2026 ல் அமையும் என முதலமைச்சர் இன்று சட்டமன்றத்தில் பேசியிருந்தார்.
இதற்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் பக்கத்தில், கள்ளச்சாராய ஆட்சிக்கு கள்ளக் குறிச்சியே சாட்சி. 2026-ல் ஒரே வெர்ஷன் தான் அது அதிமுக வெர்ஷன் தான் என்று விமர்சனம் செய்தார். மேலும், பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தார்.
இந்நிலையில் இதற்கு பதிலளிக்கும் விதமாக திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்,
“சட்டம், ஒழுங்கு குறித்து சட்டமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி சொன்ன பொய் குற்றச்சாட்டுகளை தமிழ்நாடு முதலமைச்சர் புள்ளிவிவரங்களுடன் தோலுரித்தார். அதிமுகவின் அவல ஆட்சியைப் பற்றி முதலமைச்சர் சொன்ன உண்மைகளுக்கு பதில் சொல்ல முடியாமல் எடப்பாடி பழனிசாமி வழக்கம் போலவே திமுகவை வசைபாட கிளம்பியிருக்கிறார்.
ஊழல் ஆட்சியை நடத்திய பழனிசாமி, அடுத்த வெர்ஷன் பற்றியெல்லாம் பேசலாமா?. பாஜக கூட்டணியில் சேர்ந்த போதே அதிமுகவின் வெர்ஷன் முடிந்துவிட்டது. கூட்டணி ஆட்சி என்று சொன்ன போதே பழனிசாமியின் அரசியல் அத்தியாயம் முடிவுக்கு வந்துவிட்டது. தேர்தலுக்கு முன்பே மக்கள் தங்களுக்கு அளிக்கப் போகும் படுதோல்வியை மறைக்க விரக்தியில், கேலிக்கூத்துக்களை செய்துக் கொண்டிருக்கிறார் பழனிசாமி.
தமிழ்நாட்டின் உரிமைகளை பறிக்கும் பாஜகவின் காலடியில் வீழ்ந்துக் கிடந்து அரசியல் செய்து வரும் பழனிசாமியை 2026 தேர்தலில் மக்கள் தோற்கடித்து ஓட வைக்கப்போவது உறுதி! தமிழ்நாட்டை ஆதிக்கம் செய்ய நினைக்கும் பாஜகவிற்கும், அதிமுகவிற்கும் தமிழ்நாட்டு மக்கள் 2026-லும் ‘Getout’ சொல்லப்போவது உறுதி!. இப்போது இருக்கிற 66 அதிமுக எம்.எல்.ஏ-க்கள் எண்ணிக்கையில் 2026-ல் 6 கூட கிடைக்காது. திராவிட மாடல் 2.0, அமையப் போகும் வயிற்றெரிச்சலில் பழனிசாமி செய்வதை எல்லாம் பார்த்தால், பரிதாபம்தான் வருகிறது.
‘அதிமுக ஆட்சியில் தமிழ்நாடு தலை நிமிர்ந்து நின்றது’ என சொல்லியிருக்கிறார் பழனிசாமி. சிறப்பான ஆட்சி நடத்தி இருந்தால், தொடர்ந்து 10 தேர்தல்களில் ஏன் அதிமுக தோற்றது? இடி அமீன் ஆட்சியை நடத்திவிட்டு இம்சை அரசன் போல உளறி கொட்டிக் கொண்டிருக்கிறார் பழனிசாமி. தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் மக்களின் ரத்தம் குடித்த ஆட்சி, பழனிசாமியின் ஆட்சி. “அண்ணா பெல்ட்டால அடிக்காதீங்கணா...’’ என அப்பாவி இளம் பெண்கள் கதறல் கேட்டால், அது பழனிசாமி ஆட்சிக்கு சாட்சி.
ஜெயலலிதா வாழ்ந்த பங்களாவில் கொலை, கொள்ளை நடந்த ஆட்சிக்கு கொடநாடே சாட்சி. அப்பாவையும், மகனையும் அடித்து கொன்றதற்கு சாத்தான்குளமே சாட்சி. இப்படி பழனிசாமி ஆட்சியில் நடந்த அவலங்களையும் அக்கப்போர்களையும் எப்படி மறக்க முடியும். தமிழ்நாட்டு வரலாற்றில் பழனிசாமியின் நான்கரை ஆண்டு காலம் இருண்டகாலமாகதான் இருந்தது. அரசியலின் கரும்புள்ளி நீங்கள். இனி எந்த காலத்திலும் தமிழ்நாட்டில் ஆட்சியை மட்டுமல்ல தமிழ்நாட்டு மக்களின் மனங்களையும் பிடிக்கவே முடியாது.” எனக் குறிப்பிட்டுள்ளார்.