பழனி முருகன் கோயில் தைப்பூசம் - உண்டியல் காணிக்கை ரூ.5 கோடி!
தைப்பூசத்தையொட்டி பழனி முருகன் கோயிலில் உண்டியல் எண்ணும் பணி 2 நாட்களாக நடைபெற்ற நிலையில், அதில் ரூ.5 கோடியை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியுள்ளதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். இந்த திருக்கோயிலில், ஆண்டுதோறும் சிறப்பாக நடைப்பெறக்கூடிய திருவிழாக்களில் ஒன்றான தைப்பூசம், கடந்த ஜன.19 ஆம் தேதி கொடியேற்றத்துடன் வெகு விமரிசையாக தொடங்கி 10 நாட்கள் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துக்கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
இதையும் படியுங்கள் ; ‘ஸ்குவிட் கேம் 2’ ரிலீஸ் எப்போது..? - புதிய அப்டேட்..!
அதனைத் தொடர்ந்து தைப்பூசம் திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம், ஏழாம் நாளில் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம்பிடித்து இழுத்தனர். இதையடுத்து தைப்பூசத் திருவிழாவின் நிறைவு நாளில் தெப்பத்தேர் நிகழ்ச்சி நடைபெற்றது.கோயிலுக்கு வரும் பக்தர்கள் பணம், தங்கம், வெள்ளி உள்ளிட்ட பொருட்களை காணிக்கையாக கோயில் உண்டியலில் செலுத்துவது வழக்கம். அந்த வகையில் தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு பழனி முருகன் கோயிலில் உண்டியல், பக்தர்களின் காணிக்கையால் நிரம்பியது. இந்நிலையில், அவற்றை எண்ணும் பணியில் கோயில் அதிகாரிகள், ஊழியர்கள், கல்லூரி மாணவிகள், வங்கி ஊழியர்கள் ஈடுபட்டனர்.
இரண்டு நாட்களாக உண்டியல் காணிக்கை எண்ணும் பணி தொடர்ந்த நிலையில், ரூ.5.39 கோடி ரொக்கமாக கிடைத்துள்ளதாக பழனி கோயில் நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும் 680 கிராம் தங்கமும், 25 கிலோ வெள்ளியும், 854 வெளிநாட்டு கரன்சிகளும் கிடைத்துள்ளதாகவும், கோயில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.