பழனி லட்சுமி நாராயண பெருமாள் திருக்கோயிலில் சித்திரைத் திருவிழா - கொடியேற்றத்துடன் இன்று தொடக்கம்!
பழனி அருள்மிகு லட்சுமி நாராயண பெருமாள் திருக்கோயிலில் சித்திரைத் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.
அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் பழனியில் அமைந்துள்ளது. இந்த கோயிலின் உபகோயிலான அருள்மிகு லட்சுமி நாராயண பெருமாள் திருக்கோயிலில் இன்று (ஏப். 16) சித்திரைத் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.
இதையும் படியுங்கள் : முன்னாள் அமைச்சர் புலவர் இந்திரகுமாரி காலமானார் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்!
இதையடுத்து, சங்கு, சக்கரம், திருநாமம், கருடாழ்வார், பூஜைப் பொருட்கள் பொறிக்கப்பட்ட மஞ்சள் நிறக்கொடிக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. தொடர்ந்து கலசபூஜை நடத்தப்பட்டு, கொடியேற்றம் நடைபெற்றது. பின்னர், கொடி மரத்திற்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீப ஆராதனை நடைபெற்றது.
கொடியேற்றத்தை முன்னிட்டு அருள்மிகு லட்சுமி சமேதர் நாராயணருக்கு சிறப்பு அர்ச்சனைகள், தீபாராதனைகள் நடத்தப்பட்டு திருப்பாவை, திருவெம்பாவை பாசுரங்கள் பாடப்பட்டது. கொடியேற்றம் முடிந்த பின் சுவாமி சப்பரத்தில் நான்கு ரதவீதியில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இந்த கொடியேற்ற நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
10 நாட்கள் நடைபெறும் இந்த சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு தினமும் சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் அலங்காரம் செய்யப்பட்டு சிம்ம வாகனம், அனுமார் வாகனம், தங்கக் குதிரை, சேஷ வாகனம் ஆகியவற்றில் நான்கு ரத வீதிகளில் உலா வரும் நிகழ்வு நடைபெறும். வரும் ஏப்ரல் 21-ம் தேதி திருக்கல்யாணமும், ஏப்ரல் 23-ம் தேதி காலை திருத்தேரோட்டமும் நடைபெறவுள்ளது. இன்று நடைபெற்ற கொடியேற்ற நிகழ்ச்சியில் பழனி திருக்கோயில் இணை ஆணையர் மாரிமுத்து பங்கேற்றார்.