பாகிஸ்தான் பெயர் ஜெர்சியில் இடம்பெறாது - BCCI அரசியல் செய்வதாக பாக். குற்றச்சாட்டு!
2025 சாம்பியன்ஸ் டிராபி தொடர் ஜனவரி மாதம் 19ம் தேதி முதல் மார்ச் 9ம் தேதி வரை நடைபெற உள்ளது. பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெறும் இத்தொடரில் 8 அணிகள் விளையாடவுள்ளன. அதன்படி குரூப் ஏ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து வங்காள தேசம் ஆகிய அணிகளும், குரூப் பி பிரிவில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகளும் லீக் சுற்றில் விளையாடவுள்ளன.
அதன்படி, இந்திய அணியில் ரோகித் சர்மா (கேப்டன்) , சுப்மன் கில் (துணை கேப்டன்), விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், கே.எல்.ராகுல், ஹர்திக் பாண்டியா, அக்சர் பட்டேல், வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், ஜஸ்ப்ரீத் பும்ரா, முகமது ஷமி, அர்ஷ்தீப் சிங், ஜெய்ஸ்வால், ரிஷப் பந்த், ரவீந்திர ஜடேஜா ஆகியோர் பங்கேற்கவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இதே வீரர்கள் இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரிலும் விளையாடுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், அதில் பும்ராவின் உடல்நிலை கருதி அவருக்கு பதிலாக ஹர்ஷித் ராணா இடம் பெறுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், சாம்பியன்ஸ் டிராபி போட்டிக்கான இந்திய கிரிக்கெட் வீரர்கள் அணியும் ஜெர்சியில் நடப்பு போட்டியை நடத்தும் பாகிஸ்தான் பெயரை பொறிக்க பிசிசிஐ மறுப்பு தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கு கிரிக்கெட் வட்டாரத்தில் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. இது தொடர்பாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம், விளையாட்டில் இந்தியா அரசியல் செய்வதாக குற்றச்சாட்டை முன்வைத்து சர்வதேச கிரிக்கெட் வாரியத்திடம் (ஐசிசி) புகார் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.