எல்லையில் துப்பாக்கிச்சூடு... இந்திய ராணுவம் பதிலடி - அதிகரிக்கும் பதற்றம்!
காஷ்மீரின் பஹல்காமில் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதலை தொடர்ந்து இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையே போர் பதற்றம் அதிகரித்து வருகிறது. குறிப்பாக எல்லைப் பகுதியில் பதற்றம் அதிகரித்துள்ளது. இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானியர்களுக்கு தொடர்பு இருக்குமோ என இந்தியா சந்தேகிக்கிறது.
இதனால் பாகிஸ்தான் உடனான அனைத்து ஒப்பந்தங்களையும் மத்திய அரசு ரத்து செய்துள்ளது. அந்தவகையில் இரு நாட்டு எல்லை மூடல், பாகிஸ்தானியர்களுக்கான விசா ரத்து, சிந்து நதிநீர் ஒப்பந்தம் ரத்து, பாகிஸ்தானியர்கள் வெளியேற்றம் என அடுத்தடுத்து உத்தரவுகளை இந்தியா பிறப்பித்தது.
இதனைத்தொடர்ந்து இதற்கு பதிலளிக்கும் விதமாக பாகிஸ்தானும் இந்தியாவுடனான அனைத்து ஒப்பந்தங்களையும் ரத்து செய்துள்ளது. குறிப்பாக சிம்லா ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டுள்ளது. பாகிஸ்தான் வான்பரப்பில் இந்திய விமானங்கள் பறக்க தடை விதித்துள்ளது. சிம்லா ஒப்பந்த ரத்தை தொடர்ந்து இந்திய விமானப்படை தீவிர போர்ப்பயிற்சியை தொடங்கியுள்ளது.
இந்நிலையில் எல்லைக் கட்டுப்பாடு கோடு அருகே பல்வேறு இடங்களில் பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்கிச்சூடு நடத்தியதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது. மேலும் பாகிஸ்தானின் இந்த தாக்குதலுக்கு பதில் தாக்குதல் நடத்தியுதாகவும் ராணுவம் தெரிவித்துள்ளது. இந்த தாக்குதலில் எந்தவித உயிரிழப்புகளும் ஏற்படவில்லை எனவும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து இரு அண்டை நாடுகளுக்கும் இடையே புதிய மோதல் வெடித்துள்ளதால் எல்லையில் கடும் பதற்றம் நிலவி வருகிறது.