பாகிஸ்தான் ரயில் கடத்தல் - பணையக் கைதிகள் அனைவரும் மீட்பு... 21 பயணிகள் உயிரிழப்பு!
தென்மேற்கு பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள குவெட்டாவிலிருந்து, கைபர் பக்துன்க்வாவில் உள்ள பெஷாவருக்கு ஒன்பது பெட்டிகளில் சுமார் 440 பயணிகளுடன் ஜாஃபர் எக்ஸ்பிரஸ் நேற்று முன்தினம் காலை புறப்படது. ரயில் சென்று கொண்டிருந்தபோது, கிளர்ச்சியாளர்கள் தண்டவாளத்தில் வெடிப்பொருளை வைத்து வெடிக்க செய்தனர்.
இதனால் ரயில் தடம் புரண்டது. தொடர்ந்து ரயிலை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தினர். தொடர்ந்து ரயிலில் ஏறிய கிளர்ச்சியாளர்கள் அதில் இருந்த பாதுகாப்புப் படை வீரர்கள் உள்பட 450 பயணிகளைப் பிணைக் கைதிகளாகப் பிடித்தனர். பின்னர் பொதுமக்களை விடுவித்து ராணுவ வீரர்கள் உட்பட 182 பேரை சிறைபிடித்தனர். ரயில்மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பலூச் விடுதலைப் படை பொறுப்பேற்றது.
இதில் 20 ராணுவ வீரர்களை கொன்றதாகவும் அவர்கள் தெரிவித்தனர். தொடர்ந்து பயணிகளை மீட்கும் பணியில் அந்நாட்டு ராணுவம் மற்றும் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் பணையக்கைதிகள் அனைவரும் மீட்கப்பட்டதாக பாகிஸ்தான் ராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
நேற்று பயங்கரவாதிகள் அனைவரும் கொல்லப்பட்டு, பயணிகள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டனர். இதன்மூலம் ஆயுதப்படைகள் வெற்றிகரமாக நடவடிக்கையை முடித்தன என இராணுவ செய்தித் தொடர்பாளர் லெப்டினன்ட் ஜெனரல் அகமது ஷெரீப் தெரிவித்தார். தாக்குதலில் ஈடுபட்ட 33 தீவிரவாதிகளை பாதுகாப்புப் படையினர் கொன்றனர். இருப்பினும், 21 பயணிகளும் நான்கு துணை ராணுவ வீரர்களும் உயிரிழந்தனர் எனவும் தெரிவித்தார்.
மேலும் தாக்குதலின் போதும் ரயிலில் பயணம் செய்த ஓய்வு பெற்ற ராணுவ வீரர்கள் 27 பேரும், பணியில் இருந்த ராணுவ வீரர் ஒருவரும் கொல்லப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.