பாகிஸ்தான் அணியில் அதிரடி மாற்றம் - புதிய பயிற்சியாளர்கள் நியமனம்.!
ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் பாகிஸ்தான் அணியை தயார் படுத்த இரண்டு புதிய பயிற்சியாளர்களை, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நியமித்துள்ளது.
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில், பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் ஆஸம் தலைமையில் களம் இறங்கியது. அதில் 9 லீக் போட்டிகளில் களம் இறங்கி 4 போட்டிகளில் வெற்றி பெற்றது. அதேபோல 5 போட்டிகளில் தோல்வியடைந்து புள்ளிப் பட்டியலில் 5 வது இடத்தை பிடித்தது. இந்நிலையில், பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் அனைத்து ஃபார்மேட்களில் இருந்தும் கேப்டன் பொறுப்பை ராஜினாமா செய்வதாக பாபர் ஆஸம் அறிவித்தார்.
இதற்காக, டி20 போட்டிகளுக்கு சஹீன் ஷா அஃப்ரிடியும், டெஸ்ட் போட்டிகளுக்கு ஷான் மசூத்-ம் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிவித்தது. இந்நிலையில், பாகிஸ்தான் அணி அடுத்த டிசம்பர் மற்றும் ஜனவரியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 3 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடர் மற்றும் 5 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. இந்தத் தொடரில், கிரிக்கெட் வாரியத்தின் இயக்குநராக ஹபீஸ் செயல்படவுள்ளார்.
இந்த இரு நாட்டுத் தொடர்களுக்கும் புதிய பந்துவீச்சு பயிற்சியாளர்களை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நியமித்துள்ளது. வேகப் பந்துவீச்சு பயிற்சியாளராக பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப் பந்துவீச்சாளரான உமர் குல் மற்றும் சுழற்பந்துவீச்சு பயிற்சியாளராக பாகிஸ்தானின் முன்னாள் சுழற்பந்துவீச்சாளர் சையீத் அஜ்மல் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். புதிதாக நியமிக்கப்பட்டுள்ள இருவருக்கும் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் பாகிஸ்தான் அணியை தயார் படுத்தும் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.