பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்த இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு!
இஸ்ரேல் தலைநகர் ஜெருசலேமில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து தாக்குதல் நடத்திய 2 பயங்கரவாதிகளையும் போலீசார் சுட்டுக்கொன்றனர்.
இதனிடையே இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பிரதமர் நரேந்திர மோடி கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், “இஸ்ரேல், ஜெருசலேமில் பொதுமக்கள் மீது நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலை வன்மையாக கண்டிக்கிறோம். தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து கொள்கிறேன்.
பயங்கரவாதத்தை அனைத்து வடிவங்களிலும், வெளிப்பாடுகளிலும் இந்தியா கண்டிக்கிறது. பயங்கரவாதத்திற்கு பூஜ்ஜிய சகிப்புத்தன்மை கொண்ட கொள்கையில் இந்தியா உறுதியாக நிற்கிறது”. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பயங்கரவாத தாக்குதலுக்கு எதிராக குரல் கொடுத்ததற்காக இந்தியாவுக்கு இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு நன்றி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக நெதன்யாகு வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், "இஸ்ரேலுடன் இணைந்து நின்று, நம்மை அச்சுறுத்தும் பயங்கரவாதத்திற்கு எதிராக கருத்தினை பதிவிட்ட இந்திய பிரதமர் மோடிக்கு நன்றி”. இவ்வாறு அதில் பதிவிடப்பட்டுள்ளது.