பாகிஸ்தான் பிரதமராகிறார் ஷெபாஸ் ஷெரீஃப்! - நாளை 2-வது முறையாக மீண்டும் பதவியேற்பு!
பாகிஸ்தான் பிரதமராக முஸ்லிம் லீக்-நவாஸ் கட்சியின் ஷாபாஸ் ஷெரீஃப் மீண்டும் பதவியேற்க உள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.
பாகிஸ்தான் நாடாளுமன்றத்துக்கு கடந்த 8-ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் பங்கேற்க பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக்-ஏ-இன்சாஃப் கட்சிக்கு தடை விதிக்கப்பட்டது. இதையடுத்து, அந்த கட்சியின் வேட்பாளர்கள் சுயேட்சைகளாகப் போட்டியிட்டனர். அவர்கள் அதிக இடங்களைக் கைப்பற்றியிருந்தாலும், ஆட்சியமைப்பதற்குத் தேவையான பலம் இல்லை.
இதையும் படியுங்கள் : “பெரியார், அண்ணா, கருணாநிதி எதிர்கொள்ளாத சவாலை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எதிர்கொள்கிறார்” – ஆ. ராசா எம்.பி பேச்சு!
இந்நிலையில், முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீஃப் தலைமையிலான பிஎம்எல்-என் கட்சியும், முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சர் பிலாவல் புட்டோ ஜர்தாரியின தலைமையிலான பாகிஸ்தான் மக்கள் கட்சி உள்ளிட்ட கட்சிகளும் இணைந்து புதிய அரசை அமைக்கின்றன. அதற்காக, இரு கட்சிகளின் பொது வேட்பாளராக நவாஸ் ஷரீஃபின் சகோதரர் ஷாபாஸ் ஷெரீஃப் அறிவிக்கப்பட்டார்.
அவரை எதிர்த்து பிடிஐ கட்சி சார்பில் உமர் அயூப் கான் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று (மார்ச் 3) நடைபெற இருக்கும் வாக்கெடுப்பில் ஷாபாஸ் ஷெரீஃப் வெற்றி பெறுவது உறுதியாகியுள்ளது. இதையடுத்து, அவர் மார்ச் 4ம் தேதி பதவிப் பிரமாணம் செய்துகொள்ள உள்ளார் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.