For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

பாக் நாடாளுமன்ற தேர்தல்: இம்ரான்கான் கட்சி முன்னிலை?

10:39 AM Feb 09, 2024 IST | Web Editor
பாக் நாடாளுமன்ற தேர்தல்  இம்ரான்கான் கட்சி முன்னிலை
Advertisement

பாகிஸ்தான் நாடாளுமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.  முதற்கட்டமாக கிடைத்த தகவலின்படி இம்ரான்கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக் இ இன்சாப் கட்சி முன்னிலை பெற்று வருகிறது. 

Advertisement

பாகிஸ்தானில் நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று (பிப்.08) நடைபெற்றது.  பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் மற்றும் சுயேட்சைகள் என மொத்தம் 5,121 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதற்காக நாடு முழுவதும் 90 ஆயிரத்து 582 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு இருந்தன. வன்முறை சம்பவங்களை தடுக்க சுமார் 65,000 பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருந்தனர்.

பாகிஸ்தானில் மொத்தம் 336 நாடாளுமன்ற தொகுதிகள் உள்ளன.  இதில் 60 இடங்கள் பெண்களுக்காகவும்,  10 இடங்கள் சிறுபான்மை மக்களுக்காகவும் ஒதுக்கப்பட்டு உள்ளன. மீதம் உள்ள 266 தொகுதிகளுக்கும் நேரடியாக மக்கள் மூலம் உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.

இந்தத் தேர்தலில், முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக் இ இன்சாப் கட்சி,  முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீபின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் நவாஸ் கட்சி, பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோவின் மகன் பிலாவல் பூட்டோ தலைமையிலான பாகிஸ்தான் மக்கள் கட்சிகளுக்கு இடையே மும்முனை போட்டி நிலவுகிறது.

தேர்தல் ஆணையத்தின் தரவுகளின்படி மொத்தம் 12 கோடியே 85 லட்சத்து 85 ஆயிரத்து 760 பேர் வாக்களிக்க தகுதி பெற்ற நிலையில்,  அவர்கள் சென்று வாக்களித்தனர். நேற்று (பிப்.08) காலை 8 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 5 மணி வரை நடைபெற்றது.

வாக்குப்பதிவு நிறைவடைந்தவுடன்,  வாக்கு எண்ணும் பணி தொடங்கியது. அதன்படி முன்னாள் பிரதமர் இம்ரான் கான் ஆதரவு வேட்பாளர்கள் அதிக இடங்களில் முன்னிலையில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Tags :
Advertisement