இங்கிலாந்து அணியை எதிர்கொண்ட பாகிஸ்தான் தோல்வியை தழுவி வெளியேறியது! அரையிறுதியில் இந்தியாவுடன் நியூசிலாந்து மோதுவது உறுதி!
உலகக் கோப்பை தொடரில் இருந்து பாகிஸ்தான் வெளியேற்றப்பட்டதால், அரையிறுதியில் இந்தியாவை நியூஸிலாந்து எதிர்கொள்வது உறுதியாகியுள்ளது. அதன்படி, மும்பை வான்கடே மைதானத்தில் வரும் புதன்கிழமை (நவ.15-ம் தேதி) நியூஸிலாந்தை இந்தியா எதிர்கொள்ளவுள்ளது.
கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற பாகிஸ்தான் - இங்கிலாந்து அணிகள் இடையிலான ஆட்டத்தில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பேட்டிங் செய்தது. இதில் இங்கிலாந்தின் ஜானி பேர்ஸ்டோவ் 59 ரன்கள், ஜோ ரூட் 60 ரன்கள், பென் ஸ்டோக்ஸ் 84 ரன்கள் எடுக்க இங்கிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 337 ரன்கள் குவித்தது.
பாகிஸ்தான் அரையிறுதிக்கு தகுதிபெற வேண்டுமெனில், இங்கிலாந்து நிர்ணயித்த 338 ரன்களை இலக்கை 6.2 ஓவர்களில் சேஸ் செய்ய வேண்டும் என்ற நிர்பந்தம் உருவானது.
நடைமுறைக்கு சாத்தியம் இல்லாத இந்த இலக்கை துரத்திய பாகிஸ்தான் 6.4 ஓவர்களில் இங்கிலாந்துக்கு எதிராக 30/2 என்ற நிலையில் மட்டுமே இருந்தது. அதோடு 43 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த பாகிஸ்தான் அணி 244 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது.
இதனால், பாகிஸ்தான் அணி நடப்பு உலகக் கோப்பை தொடரில் இருந்து 6வது அணியாக வெளியேறியது. பாகிஸ்தான் வெளியேறியதை அடுத்து அரையிறுதியில் இந்தியா - நியூசிலாந்து அணிகள் எதிர்கொள்வது உறுதியாகியுள்ளது. அதன்படி, மும்பை வான்கடே மைதானத்தில் வரும் புதன்கிழமை (நவ.15ம் தேதி) இந்தியா நியூசிலாந்தை எதிர்கொள்ளவுள்ளது. இதற்கு மறுநாள் மற்றொரு அரையிறுதியில் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற உள்ள ஆட்டத்தில் தென் ஆப்ரிக்கா அணியை ஆஸ்திரேலியா எதிர்கொள்கிறது.