பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் - ஐபிஎல் போட்டி பாதியில் நிறுத்தம்!
நடப்பு ஐபிஎல் தொடரின் 58வது போட்டி இமாச்சலப் பிரதேசம் மாநிலம் தரம்சாலா மைதானத்தில் நேற்று (மே.08) நடைபெற்றது. இதில் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் அணி, அக்ஷர் படேல் தலைமையிலான டெல்லி அணியை எதிர் கொண்டது.
இரு அணிகளும் பிளே ஆஃப் ரேஸில் இருப்பதால் இந்த போட்டியில் இரு அணிகளுக்குமே வெற்றி பெற வேண்டிய கட்டாய நிலையில் இருந்தது. அப்போது போட்டி நடைபெற இருந்த தரம்சாலா மைதானத்தில் மழை பெய்ததால் டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டது. இதனையடுத்து மழை நின்ற பிறகு டாஸ் போடப்பட்டது. இதில் டாஸ் வென்ற பஞ்சாப் அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி பஞ்சாப் அணி முதலில் பேட்டிங் செய்தது.
இதனிடையே பஞ்சாப் அணி 10.1 ஓவர்கள் முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 122 ரன்கள் எடுத்து. அப்போது ஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தி வந்ததால் பாதுகாப்பு காரணங்களுக்காக ஐபிஎல் போட்டி ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக போட்டி பாதிலேயே நிறுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து கிரிக்கெட் வீரர்கள் அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். மேலும் மைதானத்தில் இருந்த ரசிகர்களும் வெளியேற்றப்பட்டனர்.