ஆப்கானிஸ்தான் மீது நள்ளிரவில் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான்... தக்க பதிலடி கொடுக்கப்படும் என தாலிபான் எச்சரிக்கை!
ஆப்கானிஸ்தான் மீது நள்ளிரவில் பாகிஸ்தான் நடத்திய தொடர் வான்வழி தாக்குதலில் 15 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஆப்கானிஸ்தானின் பக்திகா மாகாணத்தின் பர்மால் மாவட்டத்தில், பாகிஸ்தான் நேற்று இரவு வான்வழித் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் குழந்தைகள் மற்றும் பெண்கள் உட்பட 15 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் உயிரிழப்புகள் அதிகரிக்கக்கூடும் எனவும் கூறப்படுகிறது.
லாமன் உட்பட ஏழு கிராமங்களை குறிவைத்து நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தான் பொறுப்பேற்றுள்ளது. இந்த தாக்குதலில் பர்மாலில் உள்ள முர்க் பஜார் கிராமம் முழுவதும் அழிக்கப்பட்டுள்ளது. இதனிடையே இந்த தாக்குதலுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என தாலிபான் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
வஜிரிஸ்தானி அகதிகளை இலக்கு வைத்துதான் பாகிஸ்தான் தாக்குதல் நடத்தி இருக்கிறது. வஜிரிஸ்தான் அகதிகள் இறையாண்மையுடனும், சுய உரிமையுடன் தங்கள் நிலத்தில் வாழ உரிமை கொண்டவர்கள் என்றும் ஆப்கானிஸ்தான் தெரிவித்துள்ளது.
பாகிஸ்தான் ராணுவத்தினர் மீது அண்மைகாலங்களில் பாகிஸ்தான் தலிபான்கள் என அழைக்கப்படும் தெஹ்ரீக்-இ-தலிபான் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்த பயங்கரவாதிகளுக்கு ஆப்கானிஸ்தானில் ஆளும் தலிபான்கள்தான் ஆதரவு தருகிறது என்பதுதான் பாகிஸ்தானின் குற்றச்சாட்டு. இந்த தாலிபான்கள் மறைவிடங்களை இலக்கு வைத்து பாகிஸ்தான் வான்வழித் தாக்குதல் நடத்தியதாகவும் கூறப்படுகிறது.