இந்தியாவின் தாக்குதலுக்கு தகுந்த பதிலடி கொடுக்கப்படும் - பாகிஸ்தான் ராணுவம்!
ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22ம் தேதி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்டனர். இதற்கு உலக தலைவர்கள், அரசியல் கட்சி தலைவர்கள் உள்ளிட்ட பலரும் கணடனம் தெரிவித்தனர். இதையடுத்து பாகிஸ்தானுடனான உறவை இந்தியா முற்றிலுமாக துண்டித்தது.
குறிப்பாக, வான்பரப்பு மூடல், சிந்துநதி ஒப்பந்தம் ரத்து, பாகிஸ்தானியர்கள் வெளியேற்றம் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது. மேலும், பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, இந்திய ராணுவம் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது.
இதனால், இரு நாடுகளிடையே போர் பதற்றம் நிலவி வரும் நிலையில் இந்தியா, பாகிஸ்தான் இடையிலான இந்த சூழலை தணிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் உலக நாடுகள் கோரிக்கை விடுத்து வருகின்றன. இந்த நிலையில் பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் அதிரடி தாக்குதல் நடத்தியுள்ளது.
இதற்கு ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த தாக்குதல் நடவடிக்கையின்போது எல்லையில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் செயல்பட்டு வந்த 9 பயங்கரவாத முகாம்கள் மீது துல்லிய தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. கோட்லி, பஹவல்பூர், முசாபராபாத் ஆகிய இடங்களில் இந்தியா ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியது.
இந்த நிலையில் இந்தியா நடத்திய இந்த அதிரடி ஏவுகணை தாக்குதலில் 8 பயங்கரவாதிகள் உயிரிழந்துள்ளனர். மேலும் 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக பாகிஸ்தான் ராணுவம் தெரிவித்துள்ளது.
இதனிடையே இந்தியாவின் தாக்குதலுக்கு தகுந்த பதிலடி கொடுக்கப்படும் என்று பாகிஸ்தான் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக ராணுவ செய்தி தொடர்பாளர் லெப்டினன்ட் ஜெனரல் அகமது ஷெரிப் சௌத்ரி கூறியிருப்பதாவது, இந்தியா 3 இடங்களில் வான்வழி தாக்குதல் நடத்தியுள்ளது. அவர்கள் பாகிஸ்தானின் வான்வெளிக்குள் நுழைய அனுமதிக்கப்படவில்லை. பாகிஸ்தான் இதற்கு பதிலடி கொடுக்கும் என்பதை திட்டவட்டமாகச் சொல்ல விரும்புகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீஃப் தெரிவித்திருப்பதாவது, இந்தியா பாகிஸ்தானில் ஐந்து இடங்களில் தாக்குதல்களை நடத்தியுள்ளது. இந்தியா திணித்த இந்த போர் நடவடிக்கைக்கு பதிலடி கொடுக்க பாகிஸ்தானுக்கு முழு உரிமை உண்டு. அதற்கு தகுந்த பதிலடியும் கொடுக்கப்பட்டு வருகிறது என்று குறிப்பிட்டுள்ளார்.