பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் எல்லை 25 நாட்களுக்கு பின் திறப்பு!
பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் எல்லையில் உள்ள டோர்காம் இரு நாடுகளை கடக்கும் முக்கிய வழித்தடம் ஆகும். இதன் வழியாக நாள்தோறும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பயணம் செய்கின்றனர். இந்த வழித்தடத்தில் தினந்தோறும் சுமார் ரூ.25 கோடி அளவுக்கு வர்த்தகம் நடைபெறுகிறது. இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த இந்த பகுதியில் ஆப்கானிஸ்தான் ராணுவ சோதனைச்சாவடி அமைக்க முயன்றது.
ஆனால் பாகிஸ்தான் தங்கள் பகுதியை ஆக்கிரமிக்க முயல்வதாக கூறி ஆப்கானிஸ்தானின் செயலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இதன் காரணமாக டோர்காம் எல்லையை பாகிஸ்தான் அரசாங்கம் மூடியது. இதையடுத்து அப்பகுதியில் ஏற்பட்ட வன்முறை காரணமாக இருநாட்டு ராணுவமும் மோதலில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது ஆப்கானிஸ்தான் தரப்பை சேர்ந்த ஒரு ராணுவ வீரர் உயிரிழந்தார்.
இதனால் இரு நாடுகளின் எல்லையிலும் பெரும் பதற்றம் நிலவியது. அதேபோல், டோர்காம் எல்லையை மீண்டும் திறப்பது குறித்து இரு தரப்பு தலைவர்கள் பேச்சுவார்த்தையும் நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்பட்டதால் 25 நாட்களுக்குப் பின் டோர்காம் எல்லை மீண்டும் திறக்கப்பட்டது.
முன்னதாக இந்த பாதையின் வழியாக நாள் ஒன்றுக்கு சுமார் 3 மில்லியன் அமெரிக்க டாலர் அளவிலான வர்த்தகம் நடைபெறுவதுடன் நாள்தோறும் பத்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் பயணம் செய்வது குறிப்பிடத்தக்கது.