PAK vs NZ : டி.எல்.எஸ். முறையில் 21 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் வெற்றி!
நியூசிலாந்து, பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான உலகக் கோப்பை லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி DLS முறையில் வெற்றி பெற்றது.
உலகக் கோப்பை லீக் போட்டியின் 35-வது ஆட்டத்தில் பாகிஸ்தான் -நியூஸிலாந்து மோதுகின்றன. கட்டாய வெற்றி பெற வேண்டிய நிலையில் பந்து வீச்சினை தேர்வு செய்தது பாகிஸ்தான் அணி. பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் இந்தப் போட்டி நடைபெறுகிறது.
இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது. அரையிறுதிக்கு முன்னேற இந்த ஆட்டத்தில் கட்டாயம் வெற்றிபெற வேண்டும் என்ற நெருக்கடியில் இரு அணிகளும் உள்ளன. இதனால் ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது என எதிர்பார்க்கப்பட்டது. அதைப்போலவே ஆட்டமும் அமைந்தது. குறிப்பாக நியூசிலாந்து வீரர்கள் பாகிஸ்தான் பந்து வீச்சை சிதறடித்தனர். பாகிஸ்தான் அணியின் முன்னணி பந்து வீச்சாளரான ஷாகின் அப்ரிடி பந்து வீச்சும் எடுபடவில்லை. ஆரம்பத்தில் இருந்தே அதிரடியாக விளையாடிய நியூசிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 401 ரன்கள் எடுத்துள்ளது. இதையடுத்து 402 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் அணி பேட்டிங்கை தொடங்கியது.
இமாலய இலக்கு என்பதால் துவக்கம் முதலே அதிரடியாக பாகிஸ்தான் வீரர்கள் விளையாடினர். 21.3 ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு பாகிஸ்தான் அணி 160 ரன்கள் எடுத்து இருந்தபோது மழை குறுக்கிட்டது. இதனால் ஆட்டம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, 41 ஓவர்களில் 342 ரன்கள் எடுத்தால் வெற்றி என்று பாகிஸ்தானுக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. மீண்டும் ஆட்டத்தை தொடங்கிய பாகிஸ்தான் அணி 25.3 ஓவர்களில் 200 ரன்களை எடுத்திருந்தது. அப்போது மீண்டும் மழை குறுக்கிட்டது. மழை தொடர்ந்து பெய்ததால் ஆட்டம் டி.ஆர்.எஸ். முடிவுக்கு கொண்டு வரப்பட்டது. இதன்படி, நியூசிலாந்து அணியை விட பாகிஸ்தான் 21 ரன்கள் அதிகமாக எடுத்திருந்ததால் அவர்கள் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
சிறப்பாக ஆடி 81 பந்துகளில் 8 பவுண்டரி 11 சிக்ஸருடன் 126 ரன்கள் விளாசிய பகர் ஜமான் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.