தயாராக இருக்கும் பாக். முப்படை - பாகிஸ்தான் துணைப் பிரதமர் இஷாக் தர் விளக்கம்!
பஹல்காம் தாக்குதல் சம்பவத்திற்கு பிறகு, இந்தியா - பாகிஸ்தான் நாடுகள் மாறி மாறி நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது. முதலில் இந்தியா சிந்து ஒப்பந்தத்தை ரத்து செய்வதாக அறிவித்தது, அதே போல் சிம்லா ஒப்பந்தத்தை ரத்து செய்வதாக பாகிஸ்தான் அறிவித்தது. மேலும் இரு நாடுகளில் உள்ள இந்தியர்களும் பாகிஸ்தானியர்களும் தங்களின் தாய்நாடு திரும்ப 48 மணி நேர கெடு விதிக்கப்பட்டது. தொடர்ச்சியாக பாகிஸ்தானியர்களின் விசாக்களை ரத்து செய்வதாக மத்திய அரசு அறிவித்தது.
இதனிடையே இந்தியாவுக்கு சொந்தமான விமானங்கள் பாகிஸ்தான் வான் பரப்பில் பறக்க பாகிஸ்தான் அரசு தடை விதித்து, இந்தியா உடனான அனைத்து வர்த்தக நடவடிக்கைகளையும் தற்காலிகமாக நிறுத்தி வைத்தது . மேலும் சிந்து நதி ஒப்பந்த ரத்து நடவடிக்கை ஒரு போர் செயல் என்று பாகிஸ்தான் அரசு கூறி, தங்களின் முப்படையை தயார் நிலையில் வைத்துள்ளது.
இந்த நிலையில் பஹல்காம் தாக்குதலில் பாகிஸ்தானுக்கு எதிராக ஆதாரம் இருந்தால் இந்தியா முன்வைக்க வேண்டும் என அந்நாட்டு துணைப் பிரதமரும் வெளியுறவு அமைச்சருமான இஷாக் தர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில், “இந்தியா மீண்டும் மீண்டும் பழி சுமத்தும் விளையாட்டை விளையாடி வருகிறது. பாகிஸ்தான் தாக்குதலில் ஈடுபாட்டிற்கான ஆதாரம் இருந்தால், அதை உலகுக்கு காட்ட வேண்டும். தற்காப்புகாகவே நாங்கள் தயார் நிலையில் இருக்கிறோம்”
இவ்வாறு பாகிஸ்தான் துணைப் பிரதமர் இஷாக் தர் தெரிவித்துள்ளார்.