For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

மேலும் 5 அரசு மருத்துவமனைகளில் 2 நிமிடங்களில் புற்றுநோயை கண்டறியும் ஸ்கேன் - அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்!

12:00 PM Mar 14, 2024 IST | Web Editor
மேலும் 5 அரசு மருத்துவமனைகளில் 2 நிமிடங்களில் புற்றுநோயை கண்டறியும் ஸ்கேன்   அமைச்சர் மா சுப்பிரமணியன் தகவல்
Advertisement

புற்றுநோயை இரண்டே நிமிடங்களில் துல்லியமாக கண்டறியும் ஸ்கேன் மேலும் 5 அரசு மருத்துவமனைகளில் நிறுவப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். 

Advertisement

கோவை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் ரூ.163.54 கோடி மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட புதிய உயர் சிறப்பு மருத்துவ கட்டிடத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொள்ளாச்சியில் இருந்து காணொலி காட்சி வாயிலாக நேற்று திறந்து வைத்தார்.  மேலும் ரூ.2.45 கோடி மதிப்பீட்டில் நீராவி சலவை வசதி கட்டிடம் கட்ட அடிக்கல் நாட்டினார்.

கோவை அரசு மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்து கொண்டு புதிய கட்டிடங்களை பார்வையிட்டார்.  இதனைத் தொடர்ந்து செய்தியாளரிடம் பேசினார்.

அப்போது அவர் பேசியதாவது:

“தமிழ்நாட்டில் புற்றுநோயை துல்லியமாக கண்டறிவதற்கு இரண்டு இடங்களில் மட்டுமே பெட் சிடி ஸ்கேன் இருந்தது.  தற்போது கோவை, சேலம், திருநெல்வேலி, தஞ்சாவூர், காஞ்சிபுரம் போன்ற 5 மாவட்டங்களில் கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனைகளிலும் இந்த பெட் சிடி ஸ்கேன்கள் அமைக்கப்பட்டு பயன்பாட்டில் இருந்து வருகிறது.  மேலும் இன்று கோவை அரசு மருத்துவமனையில் 26 கட்டண படுக்கையறைகள், 100 தீவிர சிகிச்சைக்கான படுக்கைகள்,  300 படுக்கை வசதிகள், 10 அறுவை சிகிச்சை அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.

தொழில்நுட்பத்துடன் கூடிய கருவிகள் இந்த மருத்துவமனைக்கு அர்ப்பணிக்கப்பட்டிருக்கிறது.  வால்பாறை,  உடுமலைப்பேட்டை,  வீரபாண்டி,  ஈரோடு, சத்தியமங்கலம் உள்ளிட்ட இடங்களில் புதிய கட்டடங்களை முதலமைச்சர் திறந்து வைத்துள்ளார்.  அதே போல கோவை, ஈரோடு, திருப்பூர், நீலகிரி ஆகிய நான்கு மாவட்டங்களில் மருத்துவத் துறைக்கு என 397.71 லட்சம் ரூபாய் மதிப்புள்ளான பணிகள் துவங்கி வைக்கப்பட்டுள்ளன.

கோவை அரசு மருத்துவமனையில் மழை நீர் தேக்கத்தை போக்கும் விதமாக 10 கோடி ரூபாய் செலவில் மழை நீர் வடிகால் அமைக்கப்பட உள்ளது.  மேற்கு மண்டலத்தில் உள்ள 4 மாவட்ட மக்களும் மகிழ்ச்சி அடையும் வகையிலான மருத்துவத்துறை அறிவிப்புகள் பெரிய அளவில் அறிவிக்கப்பட்டிருக்கிறது.  அனைத்து மாவட்டங்களிலும் உள்ள அரசு மருத்துவமனைகளில் கட்டண படுக்கையறைகள் படிப்படியாக துவங்கப்பட உள்ளன. இந்தியாவில் முதன்முறையாக புதிய தேர்வாளர்களுக்கு கவுன்சிலிங் வைத்து காலி பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளது.  ஊட்டியில் மட்டும் 70-க்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.

Tags :
Advertisement