பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் - முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கண்டனம்!
ஜம்மு- காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் பைசரன் எனும் புகழ்பெற்ற சுற்றுலாத் தளத்தில் ஏராளமான சுற்றுலா பயணிகள் கூடுவது வழக்கம். அந்த வகையில் இன்று(ஏப்ரல்.22) பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் அப்பகுதியை சுற்றிப்பார்க்க வந்தபோது முகமூடி அணிந்து வந்த பயங்கரவாதிகள் திடீரென சுப்பாக்கி சூடு நடத்தினர்.
இந்த பயங்கர தாக்குதலில் இதுவரை 26 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதில் தமிழ்நாட்டை சேர்ந்த சிலர் உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது. இதனிடையே ஸ்ரீ நகர் விரைந்துள்ள உள்துறை அமைச்சர் அமித் ஷா, ஜம்மு- காஷ்மீர் முதலமைச்சர் உமர் அப்துல்லா, துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா ஆகியோருடன் இணைந்து தாக்குதல் குறித்து கேட்டறிந்துள்ளார். இந்த தாக்குதல் சம்பவத்திற்கு பிரதமர் மோடி, ஜம்மு- காஷ்மீர் முதலமைச்சர் உமர் அப்துல்லா, அமெரிக்க துணை அதிபர் கே.டி. வான்ஸ், தவெக தலைவர் விஜய், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட பலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் அப்பாவி சுற்றுலாப் பயணிகளைக் குறிவைத்து நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல், ஒரு காட்டுமிராண்டித்தனமான செயல்; இது கடும் கண்டனத்திற்கு உரியது; பாதிக்கப்பட்டவர்களில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களும் அடங்குவர் என்பதை அறிந்து மிகவும் வருத்தமுற்றேன்” என்று தெரிவித்துள்ளார். பஹல்காம் தீவிரவாத தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களின் விவரங்கள் குறித்து
கேட்டறிய 011-24193300, 9289516712 ஆகிய உதவி எண்களை
தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.