‘பத்மஸ்ரீ’ விருது பெற்ற பாப்பம்மாள் உடல்நலக்குறைவால் உயிரிழப்பு!
மத்திய அரசால் பத்மஸ்ரீ விருது பெற்ற தேக்கம்பட்டி பகுதியை சேர்ந்த பாப்பம்மாள் பாட்டி உடல்நலக் குறைவால் உயிரிழந்தார்.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள தேக்கம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் பாப்பம்மாள். 100 வயதிற்கு மேலும் இயற்கை விவசாயம், ஆரோக்கியமான உணவுப் பழக்க வழக்கம், அரசியல் என்று சுறுசுறுப்பாக வலம் வந்துகொண்டிருந்த பாப்பம்மாள் உடல்நலக்குறைவால் இன்று அவரது வீட்டில் உயிரிழந்தார்.
யார் இந்த பாப்பம்மாள்?
மளிகை கடையில் இருந்து ஹோட்டல், ஹோட்டலிலிருந்து விவசாயம் என விவசாயத்திற்காக தன் வாழ்வை அர்ப்பணித்தவர்தான் இந்த பாப்பம்மாள் பாட்டி(108). சிறுவயது முதலே விவசாயத்தில் ஆர்வம் கொண்டிருந்தாலும், அதனை முறையாக கற்க தமிழக வேளாண் பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார். பின்னர் அதே பல்கலைக்கழகத்தில் விவாதக் குழு அமைப்பாளராக இருந்தது தனிக்கதை.
விவசாயம் மட்டுமின்றி அரசியலிலும் கால்பதித்துள்ளார் பாப்பம்மாள் பாட்டி. 1959ஆம் ஆண்டு தேக்கம்பட்டி ஊராட்சி உறுப்பினராகவும், 1964ஆம் ஆண்டு யூனியன் கவுன்சிலராகவும், மாதர் சங்கத் தலைவியாகவும் பல பதவிகளை வகித்துள்ளார் இந்த பாப்பம்மாள்.
இவ்வளவு சாதனைக்கும் சொந்தக்காரரான இவருக்குதான், கடந்த 2021ஆம் ஆண்டு இந்திய அரசு பத்மஸ்ரீ விருது வழங்கி கௌரவித்தது. இதனைத் தொடர்ந்து இந்தாண்டு திமுக சார்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெரியார் விருதை வழங்கினார். பாப்பம்மாளுக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் அவரது பேத்தி விருதை பெற்றுக்கொண்டார்.
இந்நிலையில், 108 வயது நிரம்பிய பாப்பம்மாள் வயது மூப்பு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக இன்று (27.09.2024) உயிரிழந்தார்.