For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

"மழையில் நனைந்து சேதமடையும் நெல் மூட்டைகள்" - ஓபிஎஸ் கண்டனம்!

நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதமடையும் சம்பத்திற்கு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார்.
11:11 AM Mar 13, 2025 IST | Web Editor
 மழையில் நனைந்து சேதமடையும் நெல் மூட்டைகள்    ஓபிஎஸ் கண்டனம்
Advertisement

நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதமடையும் சம்பத்திற்கு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது,

Advertisement

"தமிழ்நாட்டில் உள்ள நெல் கொள்முதல் நிலையங்கள் வாயிலாக நெல் மூட்டைகள் கொள்முதல் செய்யப்படும்போது, எதிர்பாராதவிதமாக ஆங்காங்கே ஏற்படும் மழை காரணமாக நெல் மூட்டைகள் சேதமடைவது என்பது வாடிக்கையாக நடந்து கொண்டே இருக்கின்றது. திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற நேரத்தில் 2021 ஆம் ஆண்டு ஜூன் மாதம் மதுரை மாவட்டம், தோப்பூர் அருகே ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகள் திறந்தவெளி களத்தில் வைக்கப்பட்டதன் காரணமாக மழையில் நனைந்து சேதமடைந்ததில் தொடங்கி, இன்று வரை தொடர்ச்சியாக நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதமடைவது நடைபெற்றுக் கொண்டே வருகிறது.

அந்த வகையில், தற்போது கடலூர் மாவட்டம், புவனகிரியில் அண்மையில் பெய்த மழையால் ஆதிவராகநத்தம் பகுதியில் கட்டப்பட்ட நெல் கொள்முதல் நிலையத்தில் மழைநீர் தேங்கியதால் ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் சேதமடைந்துள்ளன. இதேபோன்று, நாகப்பட்டினம் மாவட்டம், வாழ்குடி, பில்லாளி, மேல பூதலூர், திருமருகல் போன்ற நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் திறந்தவெளியில் வைக்கப்பட்டிருந்த முப்பதாயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்து நாசமாகியுள்ளது.

இதே நிலைமை தான் டெல்டா மாவட்டங்கள் முழுவதும் நிலவுகிறது.இ துகுறித்து, கொள்முதல் நிலைய ஊழியர்கள் கூறுகையில் திறந்த வெளியில் கிடக்கும் நெல் மூட்டைகளை ஏற்றி அனுப்ப லாரிகளை அனுப்பச் சொல்லி முதுநிலை மண்டல மேலாளர் மற்றும் கண்காணிப்பு அலுவலர் ஆகியோரிடம் வற்புறுத்தியும், எவ்விதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறுகின்றனர். இதற்கான இழப்பினை பட்டியல் எழுத்தர்கள் மீது சுமத்தக்கூடாது என்றும் அந்த ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.

நெல் கொள்முதல் நிலையங்களை உயர்த்திக் கட்டாமல் இருப்பதும், தாழ்வான இடங்களில் அமைப்பதும், கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளை உடனுக்குடன் லாரிகளில் ஏற்றி அனுப்பாததும்தான் நெல் மூட்டைகள் சேதமடைந்ததற்குக் காரணம். திமுக அரசின் நிர்வாகத் திறமையின்மைக்கு இது மற்றுமோர் எடுத்துக்காட்டு. அரசின் அலட்சியப் போக்கிற்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இனி வருங்காலங்களில் நெல் மூட்டைகள் மழையில் நனையாமல் இருக்கத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவும், கூடுதலாகக் கிடங்குகள் கட்டவும் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொன்கிறேன்"

இவ்வாறு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.

Tags :
Advertisement