கடலில் கவிழ்ந்த படகு - 15 மணி நேரம் நீந்தி உயிருக்கு போராடிய 3 மீனவர்கள் மீட்பு!
வேதாரண்யம் அருகே கடலில் படகு கவிழ்ந்து சுமார் 15 மணி நேரம் உயிருக்கு போராடிய 3 மீனவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த புஷ்பவனம் மீனவ கிராமத்தைச் சேர்ந்த ரவி என்பவருக்கு சொந்தமான பைபர் படகில் ரவி, ரகுபதி, ஜெயபால் ஆகிய மூவரும் நேற்று முன்தினம் மதியம் ஒரு மணியளவில் மீன் பிடிக்க கடலுக்குச் சென்றனர். மீன்பிடித்து விட்டு நேற்று காலை 6 மணிக்கு கரை திரும்ப வேண்டிய நிலையில், படகு கரை திரும்பாததால் புஷ்பவனம் பகுதி மீனவர்கள் படகில் சென்று அவர்களை தேடும் பணியில் ஈடுபட்டனர்.
புஷ்பவனம் பகுதி மீனவர்கள் தேடி சென்றபோது, படகில் ஓட்டை விழுந்ததால் படகு கவிழ்ந்ததும், படகில் சென்ற மூவரும் ஐஸ் பாக்ஸை பிடித்துக் கொண்டு நீந்தி உயிருக்கு போராடிக் கொண்டு இருந்ததும் தெரியவந்தது. இதனை பார்த்த மீனவர்கள் உடனடியாக அவர்களை மீட்டு, கடலில் கவிழ்ந்து கிடந்த படகையும் கட்டி இழுத்துக் கொண்டு கரைக்கு வந்து சேர்ந்தனர்.