“நம்முடைய பலமே, நம்முடைய கட்சி கட்டுமானம்தான்” - மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் சென்னை கலைஞர் அரங்கில் இன்று (மே 3) நடைபெற்றது. கூட்டத்தில் அடுத்தாண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தல் பிரசார பணிகள் குறித்தும், அரசின் சாதனைகளை மக்கள் மத்தியில் கொண்டு செல்வது பற்றியும் முதலமைச்சர் பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.
இக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது,
“அமலாக்கத்துறை உள்ளிட்ட அமைப்புகளை பயன்படுத்தி அரசியல் நடத்தும் பாஜக அரசுக்கு கண்டனம். எத்தனை மிரட்டல்கள் வந்தாலும் சட்டப்பூர்வமாகவும், மக்கள் ஆதரவுடனும் திமுக எதிர்கொள்ளும். நம்முடைய பலமே, நம்முடைய கட்சி கட்டுமானம்தான். இத்தகைய நிர்வாகக் கட்டமைப்பு எந்தக் கட்சிக்கும் கிடையாது. அந்த கட்டமைப்பை காலம் தோறும் புதுப்பித்துக் கொண்டே இருக்கிறோம்; இருக்க வேண்டும்.
தடங்கல் என்பது எப்போதும் இருக்கும். அதை உங்களிடம் இருக்கும் உழைப்பால் வெல்லுங்கள் என்பதுதான் என்னுடைய வேண்டுகோள். பாஜக தமிழ்நாட்டில் எப்படியாவது காலூன்ற நினைக்கிறது. அதற்கு அனைத்து விதமான அச்சுறுத்தலையும் செய்து அதிமுகவை அடக்கி விட்டது. பழனிசாமிக்கும் வேறு வழியில்லை. பாஜக கூட்டணியை ஏற்றுக் கொள்ளாவிட்டால் சொந்தக் கட்சியில் அவர் தலைமைக்கே சிக்கல் வரும் என்று பயப்படுகிறார். அதனால் பாஜக கூட்டணியை ஏற்றுக்கொண்டு விட்டார்.
நாம் எல்லாக் காலக்கட்டத்திலும் இதுபோன்ற சோதனைகளை எதிர்கொண்ட இயக்கம்தான். அரசியல் ரீதியாக நம்மை வெல்ல முடியாதவர்கள், இதுபோன்ற மிரட்டல்கள் மூலமாக அசிங்கப்படுத்த நினைப்பார்கள். அவர்களது அரட்டல் – மிரட்டல் – உருட்டல் அனைத்துக்கும் உண்மையான காரணம் என்ன என்பது மக்களுக்குத் தெரியும். எனவே, பாஜகவின் அச்சுறுத்தலை, அரசியல் ரீதியாக நாம் எதிர்கொள்வோம்.
அமைச்சர்கள் இனி சென்னையில் இருப்பதைவிடவும் மாவட்டங்களில் அதிக நாட்களைச் செலவிடுங்கள். சட்டமன்ற உறுப்பினர்கள் ஒவ்வொரு ஊராட்சி, வார்டு வாரியாகச் செல்ல வேண்டும். வேட்பாளர் யார் என்பதை கட்சியின் தலைமை முடிவு செய்யும். வெற்றி பெறுபவரே வேட்பாளராக நிறுத்தப்படுவார். திறமை வாய்ந்தவர் நிறுத்தப்படுவர். அவரை சட்டமன்றத்துக்கு தகுதியுள்ளவராக தேர்வு செய்ய உழைக்க வேண்டியது உங்களது கடமை.
பவள விழாவைக் கொண்டாடிய கட்சி, ஆறாவது முறையாக ஆட்சியில் அமர்ந்திருக்கக் காரணம், கோடிக்கணக்கான திராவிட முன்னேற்றக் கழகத் தொண்டர்கள்தான் என்பதை நான் அனைத்து இடங்களிலும் சொல்லி வருகிறேன்.
கடந்த 7 ஆண்டுகளாக நாம் எதிர்கொண்ட அனைத்துத் தேர்தல்களிலும் வெற்றியை பெற்று வருகிறோம். இந்த வெற்றிக்குக் காரணம், கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும்தான். இத்தகைய நன்றி உணர்வோடுதான் நாம் செயல்பட்டு வருகிறோம்”
இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.