“விமான பயணத்தை அனைவரும் அணுகக்கூடியதாக மாற்றுவதே எங்கள் நோக்கம்” - ராம் மோகன் நாயுடு!
“விமான பயணத்தை அனைவரும் அணுகக்கூடியதாக மாற்றுவதே எங்கள் நோக்கம்” என சிவில் போக்குவரத்து துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு தெரிவித்துள்ளார்.
நடந்த முடிந்த மக்களவைத் தேர்தலில் 293 தொகுதிகளை கைப்பற்றியது என்டிஏ கூட்டணி. இதனையடுத்து கடந்த ஜூன் 9 ஆம் தேதி மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்றார் நரேந்திர மோடி. இவரோடு 71 அமைச்சர்களும் அன்று பதவியேற்றனர். இந்த அமைச்சரவையில் தெலுங்கு தேசம் கட்சியின் கிஞ்சராபு ராம் மோகன் நாயுடு (36), அமைச்சராகப் பதவி ஏற்றார். மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையில் 36 வயதில் ஒருவரை அமைச்சராக நியமித்தது இதுவே முதன்முறை.
மத்திய அமைச்சரவையில் இடம்பெற்ற தெலுங்கு தேசம் கட்சியின் எம்பி ராம் மோகன் நாயுடுக்கு சிவில் விமான போக்குவரத்து துறை ஒதுக்கப்பட்டது. இந்நிலையில், அனைவரும் அணுகக்கூடிய எளிமையான பயணமாக விமான பயணத்தை மாற்றுவதே அரசின் நோக்கம் என தெரிவித்துள்ளார்.
தனியார் செய்தி நிறுவனத்திடன் பேசிய அவர்,
நான் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சராக அறிவிக்கப்பட்ட காலத்திலிருந்து எங்கு சென்றாலும், கோவிட்டுக்கு பிறகு விமான டிக்கெட்டின் விலை அதிகரித்துள்ளதாக மக்கள் கூறுகின்றனர். எனக்கு இந்த பிரச்னை குறித்த முழுமையான புரிதல் அவசியம். இதுகுறித்து ஆலோசனை கூட்டங்களை நடத்த உள்ளோம். சாமானியர்களுக்கு சவாலாக உள்ள டிக்கெட்டின் விலையை குறைக்க வேண்டும். விமான பயணத்தை சாமானியர்களிடம் கொண்டு சேர்ப்பதே எங்கள் நோக்கம்” என தெரிவித்துள்ளார்.