"தமிழகத்தில் ஏழைகள் என்ற சொல்லே இருக்கக்கூடாது என்பதே எங்கள் லட்சியம்" - எடப்பாடி பழனிசாமி!
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தனது மூன்றாம் கட்ட தேர்தல் பரப்புரையை கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனப்பள்ளி தொகுதியில் தொடங்கினார். ராயக்கோட்டை, தேன்கனிக்கோட்டை மற்றும் ஓசூர் ஆகிய மூன்று தொகுதிகளில் பரப்புரையை முடித்துவிட்டு, இறுதியாக இரவு 11 மணியளவில் சூளகிரியில் பேசினார்.
சூளகிரி பகுதி மக்களிடம் தெலுங்கு மொழி அதிகம் பேசப்படுவதால், எடப்பாடி பழனிசாமி தனது உரையை "நலமாக இருக்கிறீர்களா" என்று தெலுங்கில் தொடங்கி, அனைவரையும் கவர்ந்தார்.
பின்னர், தமிழ் மற்றும் தெலுங்கு பேசும் மக்கள் அனைவரும் ஒற்றுமையாக இருந்து, வரவிருக்கும் தேர்தலில் திமுகவை வீழ்த்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
"2026-ல் திமுக ஆட்சிக்கு வரும் என ஸ்டாலின் பகல் கனவு காண்கிறார்" என்று எடப்பாடி பழனிசாமி கூறினார்.
525 வாக்குறுதிகளில் 98 சதவீதம் நிறைவேற்றியதாக திமுக அரசு கூறுவதைப் பொய்யெனக் கூறினார். நீட் தேர்வு ரத்து, கல்விக் கடன் ரத்து, 100 நாள் வேலைத்திட்டத்தை 150 நாட்களாக உயர்த்துவது போன்ற வாக்குறுதிகளை திமுக நிறைவேற்றவில்லை என்று குற்றம் சாட்டினார்.
மேலும் "தமிழ்நாட்டில் 'ஏழைகள்' என்ற சொல்லே இல்லை என்ற நிலையை உருவாக்குவதுதான் எங்களுடைய லட்சியம்" என்று எடப்பாடி பழனிசாமி கூறினார். அதிமுக ஆட்சிக்கு வந்தால், விவசாயத் தொழிலாளர்கள், தாழ்த்தப்பட்டோர் மற்றும் மலைவாழ் மக்கள் அனைவருக்கும் கான்கிரீட் வீடுகள் கட்டித்தரப்படும் என உறுதியளித்தார்.
அதிமுக ஆட்சியில் எந்தத் திட்டமும் கொண்டுவரப்படவில்லை என உடுமலைப்பேட்டையில் ஸ்டாலின் பொய் பரப்புரை செய்வதாகவும் குற்றம் சாட்டினார். 100 நாள் வேலை திட்டத்தில் பணியாற்றியவர்களுக்கு ஊதியம் நிலுவையில் இருந்தபோது, அதிமுக மத்திய அரசிடம் பேசி ரூ.2099 கோடியைப் பெற்றுத் தந்ததாக அவர் பெருமையாகக் கூறினார்.