ரயில்வே மேம்பால பணிகள் முடிவடையாததால் ஆபத்தான முறையில் தண்டவாளத்தை கடக்கும் மக்கள்!
ஒசூர் அருகே ரயில்வே மேம்பாலப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், மாற்றுப் பாதை இல்லாததால் பொதுமக்கள் ஆபத்தான முறையில் ரயில் தண்டவாளத்தை கடந்து செல்லும் சூழல் ஏற்பட்டுள்ளது.
பெங்களூரு செல்லும் ரயில்வே பாதைகள் இருவழி பாதையாக மாற்றப்பட்டு வருகிறது. இதன் காரணமாக ஒசூர் அருகே பல்வேறு பகுதிகளில் தற்போது ரயில்வே மேம்பாலம் பணிகள் நடைபெற்று வருகின்றன. கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பாக எஸ்.எம் நகர், அன்னை நகர், ஆதித்யா நகர் மற்றும் செந்தில் நகர் பகுதியில் ரயில்வே பாலங்கள் மூடப்பட்டுள்ளன.
இதனால் குடியிருப்பு பகுதியில் இருந்து பள்ளிக்கு செல்லும் மாணவ மாணவிகளும், வேலைக்கு செல்பவர்களும் ஆபத்தான முறையில் தண்டவாளத்தை கடந்து செல்கின்றனர். இந்த ரயில்வே பாதையில் காலை 7 மணி முதல் 10 மணிக்குள் 5 ரயில்கள் செல்கின்றன.
ரயில் பாதை வளைவாக இருப்பதால் ரயில் வருவது சரியாக தெரிவதில்லை எனவும் ரயில்கள் ஒலி எழுப்பும் சத்தமும் கேட்பதில்லை என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். இதனால் ஓரிரு முறை இங்கு விபத்து ஏற்பட்டிருப்பதாகவும் அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.
இதனால் ரயில்வே பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் அல்லது மாற்று பாதையை ஏற்பாடு செய்து தர வேண்டும் என அப்பகுதி மக்கள் இன்று காலை போராட்டத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பாக மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி நிர்வாகம் மற்றும் ரயில்வே துறையிடம் பலமுறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் தெரித்துள்ளனர்.