ஆஸ்கர் விருதுக்கான இறுதிப்பட்டியல் - வெளியேறியது 'லாபதா லேடீஸ்' திரைப்படம் !
97 வது ஆஸ்கர் விருதுக்கான இறுதி பட்டியலில் இருந்து 'லாபதா லேடீஸ்' திரைப்படம் வெளியேறி உள்ளது.
திரையுலகினரின் திறமையை பாராட்டும் வகையிலும், அவர்களுக்கு அங்கீகாரம் செலுத்தும் வகையிலும் உலகம் முழுவதும் பல்வேறு சினிமா விருதுகள் வழங்கப்படுகிறது. அவை எல்லாவற்றையும் ஒப்பிடுகையில், திரைத்துறையில் உலக அளவில் உயரிய விருதாக ஆஸ்கர் விருது கருதப்படுகிறது. சிறந்த நடிகர், நடிகை, திரைப்படம், இயக்குநர் போன்ற பல்வேறு பிரிவுகளின் கீழ் ஆஸ்கர் விருதுகள் வழங்கப்படுகின்றன.
இந்நிலையில் இந்த ஆண்டு 97-வது ஆஸ்கர் விழா நடைபெற உள்ளது. இதில் இந்தியா சார்பில் ஹிந்தி மொழயில் வெளியான லபாதா லேடீஸ் திரைப்படம் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. மேலும் ஆஸ்கார் விருதுக்கு தமிழ்ப் படங்களான மகாராஜா, கொட்டுக்காளி, ஜிகர்தண்டா ,டபுள் எக்ஸ், வாழை, தங்கலான், ஜமா உட்பட 29 இந்தியத் திரைப்படங்கள் பரிந்துரைக்கப்பட்டன. இதில் 2025ஆம் ஆண்டு 'ஆஸ்கர்' விருதுக்கான சிறந்த வெளிநாட்டு படத்திற்கான பிரிவில் இந்தியாவின் அதிகாரப்பூர்வ நுழைவாக லாபதா லேடீஸ் தேர்வானது.
அமீர் கான், கிரண் ராவ், கோதி தேஷ்பாண்டே ஆகியோர் தயாரிப்பில் பிரதிபா ரந்தா, ஸ்பர்ஷ் ஸ்ரீவஸ்தவா நிதான்ஷி கோயல், சாயா கடம் உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த மார்ச் மாதம் வெளியான திரைப்படம் ‘லாபதா லேடீஸ்'. இந்தப் படம் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. ஒரே ரயிலில் பயணம் செய்யும் புதிதாக திருமணமான இரண்டு பெண்கள் தவறுதலாக வெவ்வேறு இடங்களுக்கு சென்று விடுவதால் ஏற்படும் குழப்பங்களும், அதைத் தொடர்ந்து நடக்கும் நிகழ்வுகளே இந்த திரைப்படம்.
இந்த நிலையில் ஆஸ்கர் 2025-க்கு தகுதியான படங்களின் பெயர்களை அகாடமி ஆஃப் மோஷன் பிக்சர் ஆர்ட்ஸ் அண்ட் சயின்சஸ் வெளியிட்டது. இந்தப் பட்டியலில் இந்தியா சார்பில் அனுப்பப்பட்ட 'லாபதா லேடீஸ்' திரைப்படம் இடம்பெறவில்லை. இருப்பினும், 'சந்தோஷ்' என்ற மற்றொரு இந்தி மொழி திரைப்படம் 'சிறந்த சர்வதேச திரைப்படம்' பிரிவில் இடம் பெற்றது. சந்தியா சூரி இயக்கிய இந்த திரைப்படம் கடந்த மே 2024 இல் 77வது கேன்ஸ் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது மற்றும் விமர்சகர்களால் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.