சின்னம், கட்சி பெயர் விவகாரம் - அஜித் பவார், சரத் பவாருக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு!
சின்னம், கட்சியின் பெயரைப் பயன்படுத்துவதற்காக மார்ச் 19-ம் தேதி பிறப்பிக்கப்பட்ட உத்தரவைக் கடைப்பிடிக்குமாறு சரத் பவார், அஜித் பவார் அணிகளுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மகாராஷ்டிராவில் முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா, பாஜக, தேசியவாத காங்கிரஸ் அஜித் பவார் தரப்பு கூட்டணி ஆட்சி நடைபெறுகிறது. தேசியவாத காங்கிரஸ் கட்சி (என்சிபி) சரத் பவாரால் தொடங்கப்பட்ட நிலையில், அவரது சகோதரர் மகன் அஜித் பவார் கட்சியிலிருந்து பிரிந்து சென்று பாஜக கூட்டணியில் இணைந்தார். அவருக்கு என்சிபி-யின் 53 எம்எல்ஏக்களில் 41 பேர் ஆதரவு தெரிவித்தனர்.
இதனையடுத்து, கட்சியின் பெயர் மற்றும் கடிகார சின்னம் தொடர்பாக இரு தரப்புக்கும் இடையே போட்டி நிலவியது. அஜித் பவார் தலைமையிலான கட்சிதான் உண்மையான தேசியவாத காங்கிரஸ் என தேர்தல் ஆணையம் அங்கீகாரம் அளித்ததுடன் அவர்களுக்கு கடிகார சின்னத்தையும் ஒதுக்கியது. சரத் பவார் தரப்புக்கு தேசியவாத காங்கிரஸ் (சரத்சந்திர பவார்) என்ற பெயரை தற்காலிகமாக வழங்கியது. தேர்தல் ஆணையத்தின் இந்த உத்தரவை எதிர்த்து சரத் பவார் தரப்பு உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தது.
இதுதொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் கடந்த மார்ச் 19-ம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது, “அஜித் பவார் தரப்பு கடிகாரம் சின்னத்தை பயன்படுத்தலாம். ஆனால், அது நீதிமன்ற இறுதி உத்தரவுக்கு கட்டுப்பட்டது என்பதை விளம்பரங்கள் வாயிலாக தெரியப்படுத்த வேண்டும். சரத் பவார் அணியினர் தாரை சின்னத்தையும், தேசியவாத காங்கிரஸ் கட்சி (சரத் சந்திர பவார்) என்ற பெயரையும் பயன்படுத்தலாம். இந்த உத்தரவு தற்காலிகமானது என்றும், இ ந்த விவகாரம் மறுபரிசீலனை செய்யப்படும்” என உச்ச நீதிமன்றம் தெரிவித்தது.
இந்நிலையில், நீதிபதிகள் சூர்ய காந்த் மற்றும் கே.வி.விஸ்வநாதன் ஆகியோர் அடங்கிய பெஞ்ச், மார்ச் 19-ம் தேதி அளித்த உத்தரவை பின்பற்றாததால் இரு தரப்பும் தாக்கல் செய்த மனுக்களை தள்ளுபடி செய்தது. தேர்தல் பிரச்சாரங்களில் 'தேசியவாத காங்கிரஸ் கட்சி-சரத் சந்திர பவார்' மற்றும் 'தாரை' சின்னம் ஆகியவற்றைப் பயன்படுத்துவது குறித்து கட்சித் தொண்டர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துமாறு சரத் பவார் பிரிவுக்கு அறிவுறுத்தப்பட்டது.
மேலும், அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ள கடிகாரச் சின்னத்தை தேர்தல் விளம்பரங்களில் பயன்படுத்த வேண்டாம் என்று மூத்த தலைவர் தலைமையிலான பிரிவினர் தங்கள் கட்சித் தொண்டர்கள், தலைவர்களிடம் கேட்டுக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.
இதே போல், உச்சநீதிமன்றத்தின் மார்ச் 19-ம் தேதி உத்தரவின்படி, 'கடிகாரம்' சின்னத்தை ஒதுக்குவது சப்-ஜூடிஸ் என்று நாளிதழ்களில் பெரிய மற்றும் முக்கிய விளம்பரங்களை வெளியிடுமாறு அஜித் பவார் தரப்பைக் கேட்டுக் கொண்டது. மேலும் அஜித் பவார் தலைமையிலான குழு கோரியபடி மார்ச் 19-ம் தேதி உத்தரவில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகளை மாற்றியமைக்க பெஞ்ச் மறுத்துவிட்டதுடன், உத்தரவை மாற்ற எந்த அவசியமும் இல்லை என்று தோன்றுவதாக நீதிமன்றம் சார்பில் கூறப்பட்டது.