For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

நீட் தேர்வு முறைகேடுகள் குறித்து வெளிப்படையான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் - சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் கோரிக்கை!

06:59 PM Jun 08, 2024 IST | Web Editor
நீட் தேர்வு முறைகேடுகள் குறித்து வெளிப்படையான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்   சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் கோரிக்கை
Advertisement

நீட் தேர்வு முறைகேடுகள் குறித்து நேர்மையான வெளிப்படையான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் . தமிழ்நாடு அரசின் கட்டுப்பாட்டில் உள்ள மருத்துவ இடங்களுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு வழங்கிட வேண்டும் என சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

Advertisement

இதுகுறித்து  சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் மருத்துவர்  ஜி. ஆர். ரவீந்திரநாத் தெரிவித்துள்ளதாவது..

இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு நாடு முழுவதும் நடத்தப்பட்டது.  இதில் 23 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். அத்தேர்வு முடிவுகள் கடந்த நான்காம் தேதி முன்கூட்டியே வெளியிடப்பட்டது .அது 14 ஆம் தேதிதான் வெளியிடப் பட்டிருக்க வேண்டும். தேர்வில்,  முழுமையான மதிப்பெண்ணை 67 மாணவர்கள் பெற்றுள்ளனர்.

ஹரியானாவில் ஒரே மையத்தில் தேர்வு எழுதிய ஏழு மாணவர்கள் முழுமையான 720  மதிப்பெண்களை பெற்றுள்ளனர் . இது பல்வேறு சந்தேகங்களுக்கு வழிவகுத்துள்ளது . அதைப் போலவே சில இடங்களில் வினாத்தாள் கசிய விடப்பட்டுள்ளது. தேர்வு எழுதுவதில் ஆள் மாறாட்டமும் நடைபெற்றுள்ளது.  இத்தகைய முறைகேடுகளின் காரணமாக நீட் தேர்வின் மீது கடுமையான அவநம்பிக்கை ஏற்பட்டுள்ளது .

நீட் நுழைவுத் தேர்வில் நடைபெற்றுள்ள, இம் முறைகேடுகள் தொடர்பாக முழுமையான நேர்மையான வெளிப்படையான விசாரணைக்கு ஒன்றிய அரசு உத்தரவிட வேண்டும். தவறு செய்த நபர்கள் மீது சட்ட ரீதியான கடும் நடவடிக்கையை எடுத்திட வேண்டும். தமிழ்நாடு அரசின் கட்டுப்பாட்டில் உள்ள மருத்துவ இடங்களுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு வழங்கிட வேண்டும்.அதற்காக, தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்ட மசோதாவிற்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதலை மத்திய அரசு பெற்று தர வேண்டும்.

நீட் தேர்வில் இருந்து விலக்குக் கோரும் மாநிலங்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும். அதற்கு,  தேசிய மருத்துவ ஆணையச் சட்டத்தில் உடனடியாக திருத்தத்தை கொண்டு வரவேண்டும். மாணவர் சேர்க்கை முறைகேட்டை தடுக்கும் வகையில், தனியார் மருத்துவக் கல்லூரிகளும், நிகர் நிலை மருத்துவப் பல்கலைக்கழகங்களும், மாணவர் சேர்க்கையின்  கடைசி கட்டத்தில் , நேரடியாக மாணவர் சேர்க்கையை(Mop Up Counseling )நடத்திட அனுமதிக்கக் கூடாது.

நாடு முழுவதும் உள்ள அனைத்து தனியார் மற்றும் நிகர் நிலை மருத்துவப் பல்கலைக் கழகங்களுக்கு மாநில அரசுகளும் ஒன்றிய அரசும் மட்டுமே மாணவர் சேர்க்கையை , மதிப்பெண் மற்றும்  தரவரிசை அடிப்படையில் , இட ஒதுக்கீட்டையும் பின்பற்றி நடத்திட வேண்டும். நீட் தேர்வு எழுதிய அனைத்து மாணவர்களின் முழுமையான தரவரிசை  பட்டியலையும் ( Complete Rank List), வகுப்புவாரியான தரவரிசைப் பட்டியலையும்(community rank list),மாநில அளவிலான தரவரிசைப் பட்டியலையும்( state rank list )வெளிப்படை தன்மையுடன் ,தேசியத் தேர்வு முகமை வெளியிடவில்லை.

தொடர்ந்து பல ஆண்டுகளாக ,பலமுறை எங்கள் சங்கத்தால் வலியுறுத்தப்பட்டும்
வெளிப்படத் தன்மையுடன்,இவ்வாறு  தேர்வு முடிவுகளை  தேசிய தேர்வு முகமை
(NTA)  வெளியிடுவதில்லை. இது தேசிய தேர்வு முகமை மீது அவநம்பிக்கையையும், ஐயத்தையும் ஏற்படுத்துகிறது. எனவே, முழுமையான தரவரிசைப் (Rank )பட்டியலை வகுப்பு வாரியாக ,மாநில வாரியாக வெளிப்படை தன்மையுடன் வெளியிட வேண்டும்.

தனியார் மருத்துவ கல்லூரிகள் மற்றும் நிகர் நிலை மருத்துவப் பல்கலைக்கழகங்களின் கல்விக் கட்டணங்களை நியாயமான முறையில்‌ நிர்ணயிக்க வேண்டும்.  நூறு விழுக்காடு இடங்களுக்கும்  மத்திய மற்றும் மாநில அரசுகள் நிர்ணயிக்க வேண்டும்.  மத்திய அரசு அதற்கு ஏற்ப NMC சட்டத்தை திருத்த வேண்டும். ஏற்கனவே , தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் தனியார் மருத்துவ கல்லூரிகளில்  உள்ள 100 விழுக்காடு இடங்களுக்கும்  உயர் மட்ட கல்வி கட்டண நிர்ணயக் குழு அமைத்து கல்வி கட்டணத்தை மாநில அரசு நிர்ணயம் செய்து வந்தது.

 ஆனால் மத்திய அரசு தேசிய மருத்துவ ஆணையச் சட்டம் மூலம்  50 விழுக்காடு இடங்களுக்கு ‌ தனியார் மருத்துவக் கல்லூரிகளே அவர்கள் விருப்பம் போல் எவ்வளவு வேண்டுமானாலும் கல்வி கட்டணத்தை நிர்ணயித்து  கொள்ள வழி வகுத்துவிட்டது. தனியார் மருத்துவ கல்லூரிகளில்  மீதமுள்ள 50 சதவீத இடங்களுக்கு அந்தந்த மாநில அரசு மருத்துவக் கல்லூரிகளில் பெறப்படுகின்ற கட்டணத்தை பெற வேண்டும் என்று NMC விதிமுறை கூறுகிறது . ஆனால் தனியார் மருத்துவக் கல்லூரிகள் அதை எதிர்த்து வழக்கு தொடுத்தன. வழக்கு பல ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது.

அதன் காரணமாக தற்பொழுது தனியார் கல்லூரிகளில் ,நிகர் நிலை மருத்துவப் பல்கலைக் கழகங்களில் 100% இடங்களுக்கும் அந்தந்த தனியார் நிறுவனங்களே கல்வி கட்டணத்தை தொடர்ந்து நிர்ணயித்துக் கொண்டு வருகின்றன. இதற்கு ஒன்றிய அரசும் துணை போகிறது. இதன் மூலம் ஒன்றிய பாஜக அரசு தனியார் துறைக்கு  ஆதரவாக இருக்கிறது.ஏழை எளிய மாணவர்களுக்கு எதிராக இருக்கிறது என்பது உறுதியாகிறது.

எனவே , மத்திய பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு உடனடியாக  , தனியார் மற்றும் நிகர் நிலை மருத்துவப்  பல்கலைக்கழங்களினுடைய 100 விழுக்காடு இடங்களுக்கும் கல்வி கட்டணத்தை நியாயமாக நிர்ணயிக்க வேண்டும்.  கூடுதல் கட்டணங்களை வசூல் செய்யும் கல்லூரிகள் மற்றும் கோச்சிங் சென்டர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் . ஏழை மாணவர்களின் கல்வி கட்டணத்தை மாநில மற்றும் ஒன்றிய அரசுகளே ஏற்க வேண்டும். மாணவர்களுக்கு வட்டி இல்லாத கல்விக் கடனை தங்குதடையின்றி வழங்கிட வேண்டும்.

 தனியார் நீட் உள்ளிட்ட தேர்வுகளுக்கான பயிற்சி மையங்களின் ( Private Coaching Centres)  கட்டணத்தையும் அரசே நிர்ணயிக்க வேண்டும். அம்மையங்களை பதிவு செய்து முறை படுத்த வேண்டும். இம்மையங்களில் நடைபெறும் தற்கொலைகளை தடுத்திட வேண்டும். தமிழ்நாடு அரசு  பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கு மருத்துவம் பொறியியல் உள்ளிட்ட தொழிற்கல்லூரிகளில் 7.5 விழுக்காடு இட ஒதுக்கீட்டை வழங்கி வருவது பாராட்டுக்குரியது.

இந்த இட ஒதுக்கீட்டை அனைத்து உயர் கல்வி நிறுவனங்களுக்கும், கலை அறிவியல்  கல்லூரிகளுக்கும்  விரிவுபடுத்த வேண்டும். அவ்வொதுக்கீட்டை ,நீதியரசர் கலையரசன் குழு பரிந்துரை அடிப்படையில் 10 விழுக்காடாக உயர்த்த வேண்டும். அதைப் போலவே அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு தனியாக 3 விழுக்காடு இட ஒதுக்கீட்டை வழங்கிட  வேண்டும் . தமிழ்நாடு முழுவதும் , தமிழ்நாடு அரசு நடத்தும்  நீட் பயிற்சி மையங்களின் தரத்தை உயர்த்த வேண்டும்.

அம்மையங்களில் , அரசுப்  பள்ளி , அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கும், ஏழை மாணவர்களுக்கும் இலவச  தங்கும் வசதி , உணவு வசதியுடன் கூடிய இலவசப் பயிற்சி வழங்கிட வேண்டும். ஒன்றாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை தமிழ் வழியில் படித்த மாணவர்களுக்கு மருத்துவக் கல்வி ,பொறியியல் கல்வி உள்ளிட்ட தொழில் கல்லூரிகளிலும், உயர் கல்வி நிறுவனங்களிலும். கலை அறிவியல் கல்லூரிகளிலும்   20 விழுக்காடு இட ஒதுக்கீட்டை வழங்கிட தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நமது மருத்துவ இடங்களை பாதுகாத்து ,தமிழ்நாட்டு மாணவர்களுக்கு வழங்கும் வகையில் தமிழ்வழியிலும் மருத்துவக் கல்வியை தொடங்கிட வேண்டுமென, சமூக சமத்துவத்திற்கான டாக்டர் சங்கம் வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறது.” மருத்துவர்  ஜி. ஆர். ரவீந்திரநாத் என தெரிவித்துள்ளார்.

Tags :
Advertisement