தென்காசி மாவட்டத்திற்கு ஆரஞ்சு அலர்ட்.. அருவி, அணைகளில் குளிக்கத் தடை - மாவட்ட ஆட்சியர் உத்தரவு!
தென்காசி மாவட்டத்திற்கு இன்று முதல் அடுத்த மூன்று நாட்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
தென்காசி மாவட்டத்திற்கு மே.18, 19, 20, 21 ஆகிய ஐந்து நாட்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதனால் கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
இதனால் குற்றாலம் நீர் பிடிப்புப் பகுதிகளில் கனமழை பெய்ய கூடும் என்பதால் குற்றாலத்திலுள்ள பிரதான அருவி, பழைய குற்றால அருவி, ஐந்தருவி மற்றும் இதர அருவிகளில் பெரும் வெள்ளம் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே மேற்கண்ட அருவிகள், அணை பகுதிகள் மற்றும் இதர சுற்றுலா பகுதிகளில் மறு உத்தரவு வரும் வரை பொது மக்கள் குளிக்க தடை விதித்து ஆணையிடப்பட்டுள்ளது.
எனவே தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்லவும் ஆறு மற்றும் குளங்களில் நீர்வரத்து அதிகமாக வாய்ப்பு உள்ளதால் கரையோரத்தில் வசிக்கும் மக்கள் உரிய எச்சரிக்கையுடனும் பாதுகாப்புடனும் இருந்திட அறிவுறுத்தப்படுகிறது.
ஆழமும், நீரோட்டம் அதிகம் உள்ள இடங்களுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது. இடி, மின்னல் ஏற்பட வாய்ப்புள்ளதால் விவசாய தொழிலாளர்கள் ஆடு, மாடு மேய்ப்பவர்கள், இடி மின்னலின் போது வெட்ட வெளியில் நடக்க வேண்டாம் என்றும், மரங்களுக்கு கீழ் பாதுகாப்பிற்காக ஒதுங்க வேண்டாம் என்றும், பெருமழையின் போது காய்ச்சிய குடிநீரினையே பருகி நோயிலிருந்து தங்களை காத்துக் கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மழையினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து கூற மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண் 1077 அல்லது 04633-290548 என்ற எண்களில் பொது மக்கள் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் கமல்கிஷோர் தெரிவித்துள்ளார்.