கேரளா, தமிழ்நாட்டிற்கு அடுத்த 3 நாட்களுக்கு ‘ஆரஞ்ச்’ எச்சரிக்கை!
தமிழ்நாடு மற்றும் கேரளாவிற்கு இன்றுமுதல் மூன்று நாட்களுக்கு மிக கனமழைக்கான ‘ஆரஞ்ச்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் நீலகிரி, கோவை உள்ளிட்ட 7 மாவட்டங்களில் ஆக.11,12,13- ஆகிய தேதிகளில் மிக கனமழைக்கான 'ஆரஞ்ச்' எச்சரிக்கையை இந்திய வானிலை மையம் விடுத்துள்ளது. 14ஆம் தேதி மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதை அறிவித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;
தமிழ்நாடு கடலோரப் பகுதியில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேலும், மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணத்தால் தமிழ்நாட்டில் அநேக இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் ஞாயிற்றுக்கிழமை (ஆக.11) முதல் ஆக.16 வரை இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
அதன்படி ஆக.11-இல் கோவை, நீலகிரி, நாமக்கல், திருச்சி, பெரம்பலூர் மாவட்டங்களில் மிக கன மழை பெய்யும். ஆக. 12,13-தேதிகளில் கோவை மற்றும் தேனி மாவட்ட மலைப்பகுதிகளிலும், நீலகிரி, திண்டுக்கல் மாவட்டங்களிலும் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இதனால் இந்த மாவட்டங்களுக்கு 'ஆரஞ்ச்' எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதேபோல் ஆக.13-இல் தென்காசி மற்றும் திருநெல்வேலி மாவட்ட மலைப் பகுதிகள் மற்றும் திருப்பூர், ஈரோடு, கரூர், நாமக்கல், சேலம், பெரம்பலூர், மதுரை, விருதுநகர், சிவகங்கை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களிலும், ஆக. 14-இல் கோவை மற்றும் தேனி மாவட்ட மலைப்பகுதிகள், நீலகிரி, திருப்பூர், திண்டுக்கல், ஈரோடு, நாமக்கல், சேலம் ஆகிய மாவட்டங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. தலைநகர் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் ஆக.11,12-ஆகிய தேதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கேரளாவிலும் இன்றிலிருந்து வரும் 13 ஆம் தேதிவரை கன முதல் மிக கனமழைக்கான ஆரஞ்ச் நிற எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது.