ஓபிஎஸ், குடும்ப உறுப்பினர்களுக்கு எதிரான வழக்கு | #HighCourt பிறப்பித்த அதிரடி உத்தரவு!
முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு எதிரான வழக்கை மீண்டும் விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
கடந்த 2001-2006 அதிமுக ஆட்சி காலத்தில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வருவாய்த் துறை அமைச்சராக பதவி வகித்தார். அப்போது வருமானத்துக்கு அதிகமாக ரூ.1.77 கோடி அளவுக்கு சொத்துச் சேர்ந்ததாக 2006ம் ஆண்டு திமுக ஆட்சி காலத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர். இந்த வழக்கில் ஓ.பன்னீர்செல்வம், அவரது மனைவி விஜயலட்சுமி, அவரது மகன் ரவீந்திரநாத் குமார் உள்ளிட்டோர் மீது குற்றம் சாட்டப்பட்டது.
இந்த வழக்கு விசாரணை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவுப்படி சிவகங்கை சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோருக்கு எதிரான இந்த வழக்கை திரும்பப் பெற்றுக்கொள்வதாக தமிழ்நாடு அரசு அரசாணை பிறப்பித்தது. ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோருக்கு எதிரான குற்றச்சாட்டுகளுக்கு போதிய ஆதாரங்கள் கிடைக்கவில்லை எனக் கூறி வழக்கை திரும்பப் பெற அனுமதி கோரி லஞ்ச ஒழிப்புத் துறை சார்பில் சிவகங்கை நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதன்படி, இந்த வழக்கிலிருந்து ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட அனைவரையும் விடுவித்து சிவகங்கை நீதிமன்றம் 2012ம் ஆண்டு தீர்ப்பளித்தது.
இதையும் படியுங்கள் : இலங்கைக்கு கடத்தப்பட இருந்த ரூ.27 கோடி மதிப்புள்ள மெத்தபெட்டமைன் பறிமுதல்… இருவர் கைது!
இந்நிலையில் , இந்த தீர்ப்பை மறுஆய்வு செய்ய உயர்நீதிமன்ற நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து வழக்காக எடுத்து விசாரணை மேற்கொண்டார். இந்த வழக்கில் நீதிபதி என். ஆனந்த் வெங்கடேஷ் பிறப்பித்த உத்தரவில், "முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோருக்கு எதிரான சொத்து குவிப்பு வழக்கை திரும்பப் பெற அனுமதித்து, குற்றம் சாட்டப்பட்டவர்களை விடுவித்து சிவகங்கை நீதிமன்றம் 2012ம் ஆண்டு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்கிறேன். இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள ஓ.பன்னீர்செல்வத்தின் மனைவி விஜயலட்சுமி மற்றும் அவரது சகோதரர் ஒருவர் இறந்து விட்டதால் அவருக்கு எதிரான வழக்கு கைவிடப்படுகிறது.
மற்றவர்களுக்கு எதிரான வழக்கை மதுரை எம்பி, எம்எல்ஏ-க்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்துக்கு சிவகங்கை நீதிமன்றம் வரும் நவ.27ம் தேதிக்குள் மாற்ற வேண்டும். அதன்பிறகு மதுரை சிறப்பு நீதிமன்றம் சம்பந்தப்பட்டவர்களுக்கு சம்மன் அனுப்பி, ஆஜராகும் போது பிணைப்பத்திரம் பெற்று ஜாமீன் வழங்கலாம். ஒருவேளை வழக்கை இழுத்தடிக்க முயற்சித்தால் ஜாமீனை ரத்து செய்யலாம்.
இந்த வழக்கில் தாக்கல் செய்யப்பட்ட மேல் விசாரணை அறிக்கையை துணை அறிக்கையாக எடுத்துக் கொண்டு மதுரை சிறப்பு நீதிமன்றம் வழக்கை தினந்தோறும் என்ற அடிப்படையில் வரும் 2025 ஜூன் 31ம் தேதிக்குள் விசாரித்து முடிக்க வேண்டும். மேலும் இதுதொடர்பாக உயர்நீதிமன்ற பதிவுத் துறைக்கு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்”
இவ்வாறு நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவிட்டார்.